இந்தியா

கரோனா தடுப்பு விதிமுறைகள் மீறல்: டெல்லி லக்‌ஷ்மி நகர் சந்தை மூடல்

செய்திப்பிரிவு

கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியதால் கிழக்கு டெல்லி யில் உள்ள மிகப்பெரிய காய்கறி சந்தையான லக்‌ஷ்மி நகர் சந்தை வரும் ஜூலை 5ம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக டெல்லி கிழக்கு மாவட்டம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

டெல்லி லக்‌ஷ்மி நகர் சந்தையில் கடைக்காரர்கள், சிறு வணிகர்கள், பொதுமக்கள் என யாருமே கரோனா தடுப்பு நடவடிக்கையை முறையாகப் பின்பற்றவில்லை. இந்த சந்தைக்கு மக்கள் பெருமளவில் வருவதால் இங்கு கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் நடைமுறைச் சிக்கல்களும் நிலவுகின்றன. இதனால் லக்‌ஷ்மி நகர் சந்தை கரோனா பரவல் மையமாகும் ஆபத்து இருக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு, சந்தை வரும் ஜூலை 5ம் தேதி வரை மூடப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 94 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மாநிலத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,434,188 ஆக உள்ளது. தொற்று பரவும் விகிதமும் 012% ஆகக் குறைந்துள்ளது.

டெல்லியில் கரோனா இரண்டாம் அலை கோரமுகம் காட்டியது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 19ம் தேதி முதல் கடுமையான ஊரடங்கு விதிக்கப்பட்டது. முழு ஊரடங்கு காரணமாக கரோனா பரவல் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கியது.

அதனால், அங்கு மே 30 தொடங்கி படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அப்படித்தான், கிழக்கு டெல்லியின் மிகப்பெரிய சந்தையான லக்‌ஷ்மி நகர் சந்தை இயங்கவும் அனுமதியளிக்கப்பட்டது.

ஆனால் அங்கு கரோனா விதிமுறைகள் மீறல் காணப்பட்டதால் வரும் 5ம் தேதி வரை சந்தையை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT