கரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை ஒரு மணி நேரம் வரை வீட்டில் வைத்து அஞ்சலி செலுத்தி அவரவர் மத நம்பிக்கையின்படி இறுதிச் சடங்கு செய்துகொள்ள கேரள அரசு சிறப்பு அனுமதி கொடுத்துள்ளது.
கேரளாவில் இன்னும் கரோனா பாதிப்பு கவலைக்குரிய நிலையில் இருந்தாலும் கூட, இந்தச் சலுகையை அரசு அறிவித்திருக்கிறது.
இதுவரை கரோனா நோயாளிகளின் உடலை வீடுகளுக்கு உறவினர்கள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஆனால், தற்போது அன்றாடம் 5 இலக்கத்தில் தொற்று எண்ணிக்கை பதிவானாலும் கூட, பாசிட்டிவிட்டி விகித 10% ஆக இருந்தாலும் கூட இத்தகைய சலுகையை கேரள அரசு அறிவித்திருப்பது பலரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
முன்னதாக, நேற்று கேரள முதல்வர் பினராயி விஜயன் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் கரோனா நிலவரம் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பினராயி விஜயன், "கரோனா பெருந்தொற்று ஏற்பட்ட நாள்தொட்டே மக்கள் மனங்களை நெருடும் சம்பவமாக ஒன்று இருக்கிறது. அது கரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை வீடுகளுக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்காத கெடுபிடி. அதனைத் தற்போது அரசு தளர்த்துகிறது.
கரோனாவால் உயிரிழந்தோர் உடலை உறவினர்கள் அவர்களின் வீட்டுக்கு எடுத்துச் செல்லலாம். உரிய பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். உடலை வீட்டில் வைத்திருப்பதற்கு ஒரு மணி நேரம் வழங்கப்படும். அந்த நேரத்துக்குள் அவரவர் மதத்தின்படி இறுதிச் சடங்கை நடத்திக் கொள்ளலாம்.
கேரளாவில் தொடர்ந்து பாசிடிவிட்டி ரேட் 10% ஆக இருக்கிறது. (அதாவது 100 பேரை சோதித்தால் எத்தனை பேருக்கு கரோனா இருக்கிறது என்பதை உறுதி செய்வதே பாசிடிவிட்டி ரேட் எனப்படுகிறது). ஆனால், 2975%ல் இருந்த இந்த எண்ணிக்கையை நாம் படிப்படியாக 10% ஆகக் குறைத்துள்ளோம்.
கரோனா இரண்டாவது அலை நம் மாநிலத்தை முதல் அலையைவிட படுவேகமாகப் பாதித்தாலும் கூட நாம் அதைக் கட்டுப்படுத்தி வருகிறோம். மாநிலத்தின் மருத்துவ கட்டமைப்பு, நோய்த்தாக்கம் எவ்வளவு வந்தாலும் அதனைத் தாங்கும் அளவுக்கு வலுவாக இருப்பதையே இது காட்டுகிறது. கேரளாவில் இரண்டாம் அலையின் தாக்கம் குறைய இன்னும் சில காலம் ஆகலாம். ஆகையால், ஊரடங்கில் மேலும் தளர்வுகளை அதுவரை எதிர்பார்க்க முடியாது. மாநில எல்லைகளில் கரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது " எனத் தெரிவித்தார்.