கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்பட்ட காவிரிநீரின் அளவு விநாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்ததால் கடந்த 20-ம் தேதி கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகியஅணைகளில் இருந்து தமிழகத்துக்கு விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டது. இந்நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப் பொழிவின் அளவு குறைந்ததால் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.
மைசூரு மாவட்டத்தில் கடல் மட்டத்தில் இருந்து 2284 அடி உள்ள கபினி அணையின் நீர்மட்டம்2286.50 அடியாக உயர்ந்துள்ளது. அணையிலிருந்து விநாடிக்கு 700கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள 6471 கன அடி நீரில் 1471 கன அடி நீர் பாசனத் தேவைக்காக திறக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 5 ஆயிரம்கன அடி நீர் காவிரி ஆற்றில்தமிழகத்துக்கு திறந்துவிடப்பட்டுள்ளதாக காவிரி நீர்ப்பாசன கழகம் தெரிவித்துள்ளது.