பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவை தான் சந்திக்கவில்லை என்று காங்கிரஸ் எம்.பி.யும் கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலம் அடுத்தாண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கிறது.
சட்டப்பேரவைத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் பஞ்சாப் காங்கிரஸில் உட்கட்சிப் பூசல் வலுத்துள்ளது. முதல்வர் அமரீந்தர் சிங்குக்கும், கட்சியின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே கருத்து மோதல் அதிகரித்துள்ளது.
இது சட்டப்பேரவைத் தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்தலாம் என்பதால், காங்கிரஸ் மேலிடம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
பஞ்சாப் காங்கிரசில் நிலவும் உள்கட்சி மோதலைத் தீர்ப்பதற்காக சோனியா காந்தி தலைமையில் மூன்று பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இக்குழு, மாநிலத்தில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமரீந்தர் சிங், சித்து ஆகியோரை சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து அதனை அறிக்கையாகத் தயாரித்து கட்சியின் உயர்மட்டக் குழுவிடம் சமர்ப்பித்தது.
அந்தக் குழுவிடம் சித்து அடுக்கடுக்கான புகார்களைத் தெரிவித்தார். தனக்கு துணை முதல்வர் பதவியே கிடைத்தாலும் அமரீந்தர் சிங்கின் கீழ் இயல்பாக பணியாற்ற இயலாது என்று அவர் கூறியிருந்தார்.
மேலும், கட்சி உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், அமைச்சர்கள்கூட அமரீந்தர் சிங்கை எளிதில் பார்த்துவிட முடியாது என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்திருந்தார்.
இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த சித்து தான் ராகுல் காந்தியையும், பிரியங்கா வத்ராவையும் நேரில் சந்தித்து பஞ்சாப் அரசியல் நிலவரம் குறித்து முறையிடப்போவதாகத் தெரிவித்திருந்தார்.
ஆனால், சித்துவை தான் இன்று சந்திக்கவில்லை என்று ராகுல் காந்தி கூறியிருக்கிறார்.