இந்தியா

அமெரிக்காவின் மாடர்னா கரோனா தடுப்பூசி; இந்தியாவில் பயன்படுத்த டிசிஜிஐ அனுமதி

செய்திப்பிரிவு

அமெரிக்காவை சேர்ந்த மாடர்னா நிறுவனத்தின் மருந்தை இந்தியாவில் இறக்குமதி செய்து அவசர கால பயன்பாட்டுக்கு விற்பனை செய்ய மும்பையை சேர்ந்த சிப்லா என்ற மருந்து நிறுவனமும் மத்திய மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையான டிசிஜிஐ ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸுக்கு எதிராக கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய இரு தடுப்பூசிகள் மட்டுமே புழக்கத்தில் இருந்தன. மூன்றாவதாக டாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்துக்கு ரஷ்யாவிலிருந்து ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை இறக்குமதி செய்யவும், தயாரிக்கவும் மத்திய அரசு அனுமதி அளித்தது.

இதன்படி, கடந்த மே 1-ம் தேதி ரஷ்யாவிலிருந்து முதல்கட்ட தடுப்பூசிகள் இந்தியாவில் இறக்குமதியானது. மத்திய மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையின் முறையான அனுமதி கிடைத்ததையடுத்து, ஸ்புட்னிக்-வி தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்படும் கரோனா தடுப்பூசிகளை இந்தியாவில் அனுமதிப்பது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை நடத்தி வந்தது.
மாநில அரசுகள் வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசிகளை வாங்க அனுமதி கோரின. பஞ்சாப், டெல்லி அரசுகள் அமெரிக்காவில் இருந்து மாடர்னா நிறுவனத்திடம் இருந்து தடுப்பூசியை வாங்க கோரின. ஆனால் அந்த நிறுவனம் மாநில அரசுகளுக்கு தடுப்பூசி சப்ளை செய்ய மறுத்துவிட்டது.

இதனைத் தொடர்ந்து மாடர்னா நிறுவனத்தின் மருந்தை இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்ய மும்பையை சேர்ந்த சிப்லா என்ற மருந்து நிறுவனமும் மத்திய மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையான டிசிஜிஐ அமைப்பிடம் அவசர கால பயன்பாட்டுக்கு விண்ணப்பித்து இருந்தது.

இந்த தடுப்பு மருந்துக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஏற்கெனவே ஒப்புதல் வழங்கி உள்ளன. இதனால், ஆரம்ப கட்ட பரிசோதனை இல்லாமல், இந்தியாவில் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் எனவும், இந்த தடுப்பூசியை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு முன்னர் 100 பேருக்கு தடுப்பூசி செலுத்தி அது குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்படும் என சிப்லா நிறுவனம் கூறியிருந்தது.

சிப்லா நிறுவனத்தின் விண்ணப்பத்தை டிசிஜிஐ பரிசீலனை செய்து வந்தநிலையில் அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது. சில கட்டுப்பாடுகளுடன் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளதால் அதனை ஏற்று மத்திய அரசும் ஒப்புதல் அளிக்கவுள்ளது.

SCROLL FOR NEXT