இந்தியா

கரோனா  2-வது அலை முடியவில்லை; அலட்சியம் வேண்டாம்: ஹர்ஷ்வர்தன் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

கரோனா 2-வது அலை இன்னும் முடியவில்லை, மக்கள் அலட்சியமாக இருக்கக்கூடாது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாகப் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. நாள்தோறும் லட்சக்கணக்கில் மக்கள் பாதிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

ஆக்சிஜன் பற்றாக்குறை, தடுப்பூசி பற்றாக்குறை, மருந்துகள் மற்றும் மருத்துவ வசதி கிடைக்காமல் பலர் திண்டாடினர். அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், அயர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஆதரவு கரம் நீட்டி உதவிகளை வழங்கின.
நீண்ட போராட்டத்துக்கு பின்பு கடந்த சில வாரங்களாக இந்தியாவில் கரோனா பரவல் குறைய தொடங்கி உள்ளது. ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருவதால் மக்கள் சகஜநிலைக்கு திரும்பி வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளதாவது:

கரோனா பாதிப்பு 2-வது அலை இன்னும் முடியவில்லை. கடந்த சில வாரங்களாக இந்தியாவில் கரோனா பரவல் குறைய தொடங்கி உள்ளதால் இரண்டாம் அலை முடிவடைந்து விட்டது என்று பலரும் சகஜநிலைக்கு திரும்பி வருகின்றனர்.
பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும். டெல்லியில் கரோனா பாதிப்புகள் குறைந்து விட்டது உண்மைதான். ஆனால், ஒன்றரை வருடகாலமாக இருந்த கரோனா பாதிப்பின் அனுபவங்களை மறக்கக் கூடாது.

எந்த சூழ்நிலையிலும் கவனக்குறைவாக இருக்கக் கூடாது என்றும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதிர்ஷ்டவசமாக, கடந்த 6 மாதங்களாக தடுப்பூசியும் கிடைக்கிறது.

கரோனாவுக்கு எதிரான கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும். அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலமும் நாம் கரோனாவை வெல்ல வாய்ப்புள்ளது. மக்கள் தாமாக முன் வந்து தடுப்பூசி போட்டு்க் கொள்ள வேண்டும். அப்போது மட்டுமே கரோனாவை முழுமையாக விரட்ட முடியும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT