இந்தியா

ஜம்முவில் லஷ்கர்- இ-தொய்பா ட்ரோன் தாக்குதல்; என்ஐஏ விசாரணைக்கு உத்தரவு

செய்திப்பிரிவு

ஜம்முவில் விமான நிலையம் அருகே ட்ரோன்கள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலை லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பினர் நடத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் இந்த வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஜம்மு விமானதள வளாகத்தில் உள்ள உயர் பாதுகாப்பு நிறைந்த விமானப்படை நிலைய தொழில்நுட்ப பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலையில் அடுத்த குண்டு வெடித்தது. அந்த வெடிகுண்டுகள் குறைந்த வீரியம் கொண்ட ஐஇடி வகையைச் சேர்ந்தவை என்பதால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. கட்டிடத்தின் மேற்கூரை சேதமடைந்தது.

கோப்புப் படம்

ட்ரோன்கள் எனப்படும் ஆளில்லா விமானங்கள் மூலம் இந்த குண்டு வெடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பில் இந்திய விமானப் படையைச் சேர்ந்த 2 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதும் உடனடியாக ராணுவம் செயலில் இறங்கியது. ராடார் மூலம் கண்டறிந்து தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டதால் தொடர் தாக்குதல் நடத்தப்படவில்லை.

இதைத் தொடர்ந்து ஜம்மு விமான நிலையத்தில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நார்வால் பகுதியில், 5கிலோ வெடிமருந்துடன் ஒரு தீவிரவாதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த வகையான வெடிபொருட்களை லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பினர் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. எனவே இதில் அவர்களின் கைவரிசை இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

இதனால் முக்கியத்துவம் வாய்ந்த இந்த ந்த வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது. என்ஐஏ அதிகாரிகள் விரைவில் ஜம்மு வந்து விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT