மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி, ரூ.10 கோடி கேட்டு தொடர்ந்துள்ள அவதூறு வழக்கில் பதில் அளிக்குமாறு அரவிந்த் கேஜ்ரிவால் உட்பட ஆம் ஆத்மி கட்சியின் 6 மூத்த தலைவர்களுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இதுதொடர்பாக நீதிமன்ற இணை பதிவாளர் கோவை வேணுகோபால் நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
தன் மீதும் தனது குடும்பத் தினர் மீதும் பொய்யான குற்றச்சாட் டுகளை கூறியிருப்பதாக, மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இதில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், ஆம் ஆத்மி மூத்த தலைவர்கள் குமார் விஸ்வாஸ், அஷுடோஷ், சஞ்சய் சிங், ராகவ் சத்தா மற்றும் தீபக் வாஜ்பாய் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப் பிடப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் 3 வாரத்துக்குள் எழுத்து பூர்வமாக பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது. இந்த பதில் கிடைத்த பிறகு, அடுத்த 2 வாரங்களில் மனுதாரர் தனது பதிலை நீதிமன்றத்தில் எழுத்து பூர்வமாக சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், மனுதாரர் தனது மனுவில் கூறியுள்ள தங்கள் மீதான குற்றச்சாட்டு தொடர்பான அசல் ஆவணங்களை ஒரு வாரத்தில் கேஜ்ரிவால் உள்ளிட்ட 6 பேரும் சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஆவணங்களை ஏற்பது அல்லது மறுப்பது குறித்து 2016-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி முடிவு செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.