கேரளாவில் மூடப்பட்ட தொழிற் சாலையை கரோனா சிகிச்சை மையமாக மாற்றி உள்ளது கோக கோலா நிறுவனம்.
கேரளாவின் பிளாச்சிமடா கிராமத்தில் கடந்த 1999-ம் ஆண்டு 34 ஏக்கர் பரப்பளவில் கோக கோலா தொழிற்சாலை தொடங்கப்பட்டது. ஆனால் அதிகமாக நீர்வளத்தை சுரண்டுவதாகவும், அதனால் விவசாயம் பாதிக்கப்படுவதாகவும் போராட்டம் வெடித்தது. இதனால் கடந்த 2004-ம் ஆண்டு இந்த ஆலை மூடப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஆண்டு கரோனா தொற்று பரவியது. அதிக பாதிப்புக்குள்ளான மாநிலங்களில் ஒன்றாக கேரளா உள்ளதால் சிகிச்சை மையங்களுக்கான தேவை அதிகரித்தது. எனவே கோக கோலாவின் மூடப்பட்ட ஆலையை தற்காலிக கரோனா சிகிச்சை மையமாகப் பயன்படுத்த அனுமதிக்குமாறு கேரள அரசு கோரிக்கை வைத்தது. இதை கோக கோலா நிறுவனம் ஏற்றுக்கொண்டது. இதையடுத்து, அங்கு 600 படுக்கைகள் கொண்ட கரோனா மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கேரள மின் துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி கூறும்போது, ‘‘மாநிலம் முழுவதும் கரோனா தடுப்புப் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அதன் ஒரு அங்கமாக படுக்கை வசதிகளுடன் கூடிய சிறப்பு வார்டுகளையும் அமைத்து வருகிறோம். அரசின் கோரிக்கையை ஏற்று மூடியே கிடந்த ஆலையை கரோனா மையமாக மாற்ற கோக கோலா நிறுவனம் அனுமதி வழங்கியது. அங்கு ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 100 ஆக்சிஜன் படுக்கைகள், 10 வெண்டிலேட்டர்கள், 40 ஐ.சி.யு. படுக்கை வசதிகளும், குழந்தைகளுக்கான பத்து படுக்கைவசதிகளும் உள்ளன. இங்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கவும் வழி செய்யப்பட்டுள்ளது. 12 சுகாதார பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்’’என்றார்.
பிளாச்சிமாடா பகுதியை உள்ளடக்கிய பெரும்பாட்டி பஞ்சாயத்தின் தலைவர் ரிஷா இந்துதமிழ்திசையிடம் கூறும்போது,‘‘இந்த மையம் எங்கள் பஞ்சாயத்தில் அமைந்துள்ளது. இங்கே சிகிச்சைக்கு வருபவர்களுக்கு உணவு கொடுப்பதற்காக கொடையாளர்களையும் ஏற்பாடு செய்துவிட்டோம். இதனால் 8 கிராம மக்கள் பயன் அடைவார்கள். சம்பந்தப்பட்ட 8 கிராம பஞ்சாயத்துக்களும் தலா ரூ.10 லட்சமும், சித்தூர் ஊராட்சி ஒன்றியம் சார்பில் ரூ.30 லட்சமும் இந்த மருத்துவமனைப் பணிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது" என்றார்.
கோக கோலா நிறுவனத்தின் தகவல் தொடர்பு அதிகாரி கமலேஷ் குமார் சர்மா கூறும்போது ‘‘கரோனா ஒழிப்புப் பணியில் அரசின் நடவடிக்கையில் கோக கோலா பங்களிப்பு செய்திருப்பதை நிறைவாக உணர்கிறோம்’’என்றார்.