உத்தரப் பிரதேசம், பதான் மாவட்டத்தில் 2 சிறுமிகள் பலாத் காரம் செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டது தொடர்பாக மாவட்ட போலீஸ் எஸ்.பி., மாவட்ட ஆட்சியர் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து முதல்வர் அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.
பதான் மாவட்டம், கத்ரா சதாத்கன்ஞ் கிராமத்தைச் சேர்ந்த 2 சிறுமிகளை ஒரு கும்பல் பலாத்காரம் செய்து கொலை செய்தது. இந்தச் சம்பவம் தொடர் பாக மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையில் லக்னோவில் சனிக்கிழமை சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் எடுக்கப்பட்ட முடிவின் படி, பதான் மாவட்ட போலீஸ் எஸ்.பி. அதுல் சக்சேனா, மாவட்ட ஆட்சியர் சந்திர பிரகாஷ் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து முதல்வர் அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டார். மேலும் மாநிலம் முழுவதும் 66 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், 42 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்தும் முதல்வர் உத்தரவுப் பிறப்பித்தார்.
இந்த நடவடிக்கை குறித்து மாநில தலைமைச் செயலாளர் அலோக் ரஞ்சன் நிருபர்களிடம் கூறியதாவது:
பதான் மாவட்ட சம்பவம் தொடர்பாக 2 போலீஸார் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டனர். இப்போது மாவட்ட எஸ்.பி, மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கொலைக்கு வேறு சில காரணங்களும் இருப்பதாகத் தெரிகிறது. கொலையுண்ட ஒரு சிறுமி அவரின் பெற்றோருக்கு ஒரே குழந்தை. சொத்தை அபகரிப்பதற்காக ஒரே வாரிசான அந்தச் சிறுமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம்.
ஒரு சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படுவது உறுதி செய்யப்படவில்லை. இதுகுறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பதான் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த மாநில அரசு பரிந்துரை செய்துள்ளது. .