உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
அசாதுதீன் ஓவைஸியின் ஏஐஎம்ஐஎம் கட்சியுடன் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டு சேரலாம் எனப் பரவலாகப் பேசப்பட்டு வந்த நிலையில் மாயாவதி இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் இன்று காலையில் சில ட்வீட்களை வெளியிட்டார்.
அதில், "பகுஜன் சமாஜ் கட்சி ஏஐஎம்ஐஎம் கட்சியுடன் கூட்டணி ஏற்படுத்தியுள்ளதாக ஊடகத் தகவல்கள் வெளியாகின. இதுவரை பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக ஷிரோன்மணி அகாலி தலத்துடன் கூட்டணி ஏற்படுத்தியிருக்கிறோம். அதில் 117 இடங்களில் எஸ்ஏடி 97, பகுஜன் சமாஜ் 20 என்று உடன்பாடு எட்டப்பட்டிருக்கிறது. மற்றபடி உ.பி. மற்றும் உத்தரகாண்ட் தேர்தலுக்காக ஏஐஎம்ஐஎம் கட்சியுடன் கூட்டணி ஏற்படுத்தியுள்ளதாக வெளியான தகவலில் உண்மையில்லை. இது தவறானது. அடிப்படை ஆதாரமற்றது. இதில் ஒரு துளியேனும் உண்மையில்லை" எனப் பதிவிட்டுள்ளார்.
இதன் மூலம் உ.பி. அரசியல் களத்தில் சலசலக்கப்பட்ட ஊகங்களுக்கு அவர் முடிவு கட்டியுள்ளார்.
இதேபோல், அகிலேஷ் யாதவ் மீண்டும் காங்கிரஸ் அல்லது பகுஜன் சமாஜ் உடன் கூட்டணி சேரலாம் என்று வெளியானத் தகவலையும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் மறுத்துள்ளார்.
இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், காங்கிரஸுடன் கைகோத்து நாங்கள் ஏமாற்றத்தை மட்டுமே கண்டோம். அதேபோல் மாயாவதி கட்சியுடன் இணைந்தும் எங்களுக்கு எந்தப் பயனும் ஏற்படவில்லை. ஆகையால் அடுத்த ஆண்டு நடைபெறும் உ.பி., உத்தரகாண்ட் சட்டப்பேரவைத் தேர்தல்களில் நாங்கள் தனித்துப் போட்டியிடுவோம் இல்லை கொள்கை ரீதியாக ஒருமித்த கருத்து கொண்ட சிறிய கட்சிகளை இணைத்துப் போட்டியிடுவோம் என்று கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத் தேர்தலுக்கு பாஜகவும் இப்போதிருந்தே வியூகம் வகுக்கத் தொடங்கிவிட்டது. உ.பி. பாஜக துணைத் தலைவர் கட்சி மேலிடம் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அபிமானத்தைப் பெற்ற முன்னாள் மத்திய அரசு அதிகாரி ஏ.கே.சர்மாவை நியமித்திருக்கிறது.