இந்தியாவில் முதன் முறையாக 'பயோ - டீசல்' இன்ஜின் மூலம் இயங்கும் விரைவு ரயில் கர்நாடக மாநிலம் ஹூப்ளி - பெங்களூரு இடையே இயக்கப்பட்டது. இதற்கு பயணிகளிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
கர்நாடக மாநிலம் ஹூப்ளி பெங்களூரு இடையிலான ஜன சதாப்தி விரைவு ரயிலில் பயோ டீசல் இன்ஜின் இணைக்கப்பட்டு கடந்த வியாழக் கிழமை இயக்கப்பட்டது. தென்மேற்கு ரெயில்வே பொது மேலாளர் பி.கே. சக்சேனா இந்த ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:
நாட்டிலேயே முதன் முறை யாக ‘பயோ - டீசல் இன்ஜின் தென்மேற்கு ரயில்வே மூலம் இயக்கப்படுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ‘பயோ - டீசல்’ இன்ஜின் பயன்படுத்து வதன் மூலம் செலவு குறையும். காய்கறி எண்ணெய்களில் இருந்து ‘பயோ - டீசல்’ பெறப்படுவதால், எரிபொருள் தட்டுப்பாடு ஏற் படாது. இதனால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்யின் அளவும் குறையும்.
படிப்படியாக நாடு முழுவதும் ‘பயோ டீசல்’ ரயில் இன்ஜின்களை அறிமுகம் செய்வது குறித்தும் அரசு பரிசீலித்து வருகிறது. அடுத்தகட்டமாக பெங்களூரு - ஹொசப்பேட்டை இடையே ‘பயோ டீசல்’ இன்ஜின் ரயில் இயக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முதல்முறையாக இயக்கப் பட்ட ‘பயோ-டீசல்’ ரயில் இன்ஜினுக்கு பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ள தாகவும் ரயில்வே துறை உயர திகாரிகள் தெரிவித்தனர்.