உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு மீண்டும் பரிந்துரைக்க வேண்டாம் என்று தலைமை நீதிபதிக்கு வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம் கடிதம் அனுப்பி உள்ளார்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனக் குழு, மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம் பெயரை நீதிபதியாக நியமிக்க பரிந்துரைத்திருந்தது. அவரது பெயரை மத்திய அரசு நிராகரித்து விட்டது. கொல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அருண் மிஸ்ரா, ஒடிஷா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல், மூத்த வழக்கறிஞர் ரோஹின்டன் நாரிமன் ஆகியோரது பெயர்களை மத்திய அரசு ஏற்றுக் கொண்டு, நீதிபதியாக நியமிக்க பரிந்துரைத்துள்ளது.
இந்நிலையில், 2 ஜி விவகாரத்தில் நீரா ராடியாவுடன் பேசியது உள்ளிட்ட பல விவகாரங்களில் கோபால் சுப்பிரமணியம் மீது மத்திய அரசு அதிருப்தி அடைந் துள்ளதாக செய்திகள் வெளி வந்தன. இதனால், கோபால் சுப்ரமணியம் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. கோபால் சுப்ரமணியமும் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, சொலிசிட்டர் ஜெனரலாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு நிராகரித்திருந் தாலும், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழு மீண்டும் அதே பெயரை பரிந்துரைக்க வழியுண்டு. அப்படி பரிந்துரைத்தால் மத்திய அரசு அதை ஏற்பதைத் தவிர வேறு வழியில்லை.
இந்நிலையில், வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி லோதாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், நீதிபதி நியமனத்தில் இருந்து தன்னை விலக்கிக் கொள்ள விரும்புவதாகவும், மீண்டும் தன் பெயரை பரிந்துரைக்க வேண்டாம் என்று தலைமை நீதிபதியை கேட்டுக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு மேல் உச்ச நீதிமன்றம் எடுக்கும் முடிவைப் பொறுத்தே அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும்.