இந்தியா

இரண்டாம் அலை அளவுக்கு கரோனா மூன்றாம் அலை பாதிப்பை ஏற்படுத்தாது: ஐசிஎம்ஆர் ஆய்வில் தகவல்

செய்திப்பிரிவு

இந்தியாவில் இரண்டாம் அலை அளவுக்கு கரோனா மூன்றாம் அலை தீவிரமாக இருக்காது என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) நடத்திய ஆய்வில், “முந்தைய நோய்த் தொற்றிலிருந்து உருவான நோய் எதிர்ப்பு சக்தியை முழுமையாக இழக்கும்வரை புதிய அலையால் தாக்கம் இருக்காது. இந்தியாவில் இரண்டாம் அலை அளவுக்கு மூன்றாம் அலை தீவிரமாக இருக்காது. புதிய வைரஸ் வேற்றுருக்கள் அதிக தொற்றைப் பரப்ப அவற்றின் உருவாக்கமும் தீவிரமாக இருக்க வேண்டும்.

எனவே, தடுப்பூசிகளை வேகமாகச் செலுத்துவதன் மூலம் எதிர்கால அலைகளை நிச்சயம் தடுக்க முடியும். நாங்கள் நடத்திய ஆய்வில் மூன்றாவது அலை ஏற்படுவதற்கு வாய்ப்பிருக்கிறது நிரூபணமாகிறது. ஆனால், இரண்டாவது அலை அளவுக்கு பாதிப்பு இருக்காது. இதில் தடுப்பூசிகளின் பங்கு முக்கியமானது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்தியாவில் 11 மாநிலங்களில் டெல்டா வைரஸிலிருந்து வேற்றுருவாக்கம் அடைந்த டெல்டா பிளஸ் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை 45,000 மாதிரிகளைப் பரிசோதனை செய்ததில் 48 பேருக்கு டெல்டா பிளஸ் வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 20 பேருக்கும், தமிழகத்தில் 9 பேருக்கும், மத்தியப் பிரதேசத்தில் 7 பேருக்கும், கேரளாவில் 3 பேருக்கும் டெல்டா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குஜராத் மற்றும் பஞ்சாப்பில் இருவருக்கும், ஆந்திரா, ஒடிசா, ராஜஸ்தான், கர்நாடகா, ஜம்முவில் தலா ஒருவருக்கும் டெல்டா பிளஸ் வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

SCROLL FOR NEXT