மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்காக கர்நாடக அரசு தேர்வு செய்துள்ள இடத்தில் அந்த மாநில நீர்வளத் துறை சார்பில் நடப்பட்டுள்ள கொடிகள். 
இந்தியா

மேகேதாட்டுவில் கர்நாடகா அணை கட்ட காவிரி நீர் ஆணைய கூட்டத்தில் தமிழகம் தரப்பில் கடும் எதிர்ப்பு: 2 மாதத்துக்கான நீரை திறந்துவிடவும் உத்தரவு

இரா.வினோத்

காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில், மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சிப்பதற்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 12-வது கூட்டம் நேற்று காணொலி மூலம் கூடியது.இதில், மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சிப்பதற்கு தமிழகம் கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. ஆணையத்தின் தற்காலிக‌தலைவரும் மத்திய நீர்வளத்துறையின் ஆணையருமான எஸ்.கே.ஹல்டார் தலைமையில் நடந்த கூட்டத்தில், தமிழக அரசு சார்பில் பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவர் சுப்பிரமணியன், நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, அரசு சிறப்பு செயலாளர் அசோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதேபோல, கர்நாடக அரசின்சார்பில் நீர்வளத்துறை செயலாளர்ராகேஷ், கேரள அரசின் சார்பில்நீர்வளத்துறை தலைமை செயலாளர் பி.கே.ஜோஷ், புதுச்சேரி அரசின் சார்பில் நீர்வளத்துறை செயலாளர் விக்ராந்த் ராஜா உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், கர்நாடக அரசு மேகேதாட்டு அணை திட்டம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தது. இதற்கு தமிழக அரசின் சார்பில் கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா எதிர்ப்புத் தெரிவித்து பேசியதாவது:

மேகேதாட்டு திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழக அரசு சார்பில் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, அதைப் பற்றி இந்தக் கூட்டத்தில் விவாதிக்கக் கூடாது. கர்நாடக அரசு மேகேதாட்டுவில் புதிய அணை கட்ட முயற்சிப்பதை நிறுத்த வேண்டும். எவ்வித தொடக்கப் பணிகளும் மேற்கொள்ளக் கூடாது.

மேலும், உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பின்படி ஜூன் மாதத்தில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 9.19 டிஎம்சி நீரையும், ஜூலைமாதத்தில் வழங்க வேண்டிய 31.24டிஎம்சி நீரையும் கர்நாடக அரசுஉரிய நேரத்தில் திறந்துவிட வேண்டும். குறுவை சாகுபடிக்காக கர்நாடக அரசு மாதந்தோறும் தரவேண்டிய நீரையும் முறைப்படி வழங்க வேண்டும். இவ்வாறு அவர்வலியுறுத்தினார். தமிழக அரசின் எதிர்ப்பு காரணமாக இக்கூட்டத்தில் மேகேதாட்டு அணை திட்டம் பிரச்சினை குறித்து விவாதிக்க நேரம் ஒதுக்கப்படவில்லை.

இறுதியில் பேசிய காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்டார், “ஜூன், ஜூலை மாதங்களில் கர்நாடகா, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை உரிய நேரத்தில் திறந்துவிட வேண்டும்’’ என உத்தரவிட்டு கூட்டத்தை தள்ளிவைத்தார். இதனிடையே, வரும் 30-ம் தேதி நடைபெற உள்ள காவிரி நதி நீர் ஒழுங்காற்று குழுக் கூட்டத்திலும் தமிழக அரசு இதே கோரிக்கையை வலியுறுத்த இருப்பதாகத் தெரிகிறது.

SCROLL FOR NEXT