மும்பையில் 2,000 பேருக்கு போலி தடுப்பூசி போட்டது தொடர்பாக பெண் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் கரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய,மாநில அரசுகள் தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக செயல்படுகின்றன. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் சார்பில் முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், மும்பையில் உள்ள சில குடியிருப்புகளில் தனியார் மருத்துவமனைகளின் பேரில் தடுப்பூசி முகாம்களைச் சிலர் ஏற்பாடு செய்துள்ளனர். அந்த முகாம்களில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் சிலருக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று கிடைத்துள்ளது. சான்று கிடைத்தவர்கள் அதில் குறிப்பிடப்பட்ட மருத்துவ மனைகளை அணுகியபோது, அவர்கள் பகுதியில் நடத்தப்பட்ட தடுப்பூசி முகாம்களுக்கும் மருத்துவமனைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறி யிருக்கிறார்கள். பின்னரே மக்கள் மும்பை காவல் துறையிடம் புகார் செய்துள்ளனர்.
அதையடுத்து விசாரணை மேற் கொண்டதில் அவர்களுக்குப் போலி தடுப்பூசிகள் செலுத்தப் பட்டதாகவும், அதில் அதிகபட்சம் உப்புத் தண்ணீர்தான் இருந்துள்ளது என்றும் தெரிய வந்துள்ளது. கோவிஷீல்ட் எனப் பெயரிடப்பட்ட குப்பிகளில் உப்புத் தண்ணிரை நிரப்பி தடுப்பூசி என மக்களை ஏமாற்றியுள்ளனர் என்று காவல் துறை தெரிவித்துள்ளது.
இந்த விவகாரத்தில் தடுப்பூசி சான்று வழங்கும் அதிகாரப்பூர்வ கோவின் இணையதளத்தின் கடவுச் சொல் உள்ளீட்டு விவரங்களைப் பகிர்ந்த பெண் உட்படஇதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் போலி தடுப்பூசி விற்பனையின் மூலம் திரட்டிய ரூ.12.40 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர்களுடைய வங்கிக் கணக்கை முடக்கியுள்ளதாகவும் கூறியுள்ளது.
போலி முகாம்களில் செலுத்தப்பட்ட தடுப்பூசிகள் குறித்து ஆய்வு செய்யவும், தடுப்பூசி முகாம்களைக் கண்காணிக்கவும் மும்பை உயர்நீதிமன்றம் மும்பைமாநகராட்சிக்கு உத்தரவிட் டுள்ளது.
மேலும் இதில் பாதிக்கப்பட்ட வர்களுக்கு முறையான கரோனா பரிசோதனைகளை மேற்கொண்டு கோவிட் தடுப்பூசி செலுத்தவும் ஏற்பாடு செய்ய உத்தரவிட்டுள்ளது.
மும்பையில் இதுவரை 51 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக கோவின் தளத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. - பிடிஐ