கரோனா தொற்று தாண்டவமாடிய ஏப்ரல்- மே மாதங்களில் டெல்லியில் ஆக்சிஜன் தேவையை அம்மாநில அரசு மிகைப்படுத்தி கூறி 4 மடங்கு பெற்றதாகவும், இதனால் ஆக்சிஜன் தேவையுள்ள மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பாஜக மூத்த தலைவர் சம்பத் பத்ரா தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாதத்தில் நாடு முழுவதும் நாள்தோறும் 4 லட்சம் பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கரோனா நோயாளிகள் பலர் உயிரிழந்தனர். இதுகுறித்து தாமாக முன்வந்து விசாரித்த உச்ச நீதிமன்றம், நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாகுறையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டெல்லிக்கு கூடுதல் ஆக்சிஜனை விநியோகிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
பின்னர் மாநிலங்களுக்கு ஆக்சிஜனை பகிர்ந்து அளிப்பது தொடர்பாக குழு ஒன்றை உச்ச நீதிமன்றம் நியமித்தது. அனைத்து மாநிலங்களின் ஆக்சிஜன் தேவையை நிபுணர் குழு ஆய்வு செய்யும் எனவும், அதன் அடிப்படையில் அனைத்து மாநிலங்களுக்கும் சரிசமமாக ஆக்சிஜன் பகிர்ந்து அளிக்கப்படும், தற்போதைய ஆக்சிஜன் இருப்பு, விநியோகம், எதிர்கால தேவை குறித்து நிபுணர் குழு பரிந்துரைகளை சமர்ப்பிக்கும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்காக துணைக்குழுக்களையும் உச்ச நீதிமன்றம் நியமித்தது. இக்குழுவின் இடைக்கால அறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பல்வேறு தகவல்கள் வந்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் சம்பத் பத்ரா இன்று தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
டெல்லியில் ஆக்சிஜனின் சராசரி நுகர்வு 284 முதல் 372 மெட்ரிக் டன் வரை இருந்தது. டெல்லி அரசின் தகவல் படி ஏப்ரல் 29-ம் தேதி முதல் மே 10-ம் தேதி வரையில் ஆக்சிஜன் நுகர்வு மொத்தம் 350 மெட்ரிக் டன்னை தாண்டவில்லை.
டெல்லியில் ஆக்சிஜன் படுக்கைகளுக்கு ஏற்ற அளவான 289 மெட்ரிக் டன்னை விட 4 மடங்கு கூடுதலாக 1,140 மெட்ரிக் டன் ஆக்சிஜனை டெல்லி மருத்துவமனைகள் கூடுதலாக பெற்றுள்ளன.
டெல்லிக்கு அதிகபடியான ஆக்சிஜன் வழங்கப்பட்டதால், ஆக்சிஜன் தேவைப்பட்ட மற்ற மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடைக்கால அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் விவகாரத்தில் கேஜ்ரிவால் அரசு அரசியல் செய்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.