இந்தியா

உ.பி.யின் கிருஷ்ண ஜென்ம பூமி வழக்கு: ஒன்றரை மடங்கு நிலம் அளித்து மசூதியை இடம் மாற்ற கோரி மனு

ஆர்.ஷபிமுன்னா

உத்தர பிரதேச மாநிலத்தில் அயோத்தியைப் போலவே வாரணாசியிலுள்ள கியான்வாபி மசூதி மீதான வழக்கில் கடந்த ஏப்ரல் 8-ல் அகழாய்விற்கு உத்தர விடப்பட்டிருந்தது. இந்த உத்தரவு 1991 மதச்சின்னங்கள் பாதுகாப்பு சட்டத்தை மீறும் வகையில் இருப்பதாக புகார் எழுந்தது.

மதுராவின் கிருஷ்ண ஜென்ம பூமி போராட்டக்குழுவின் தலைவர் மகேந்திர பிரதாப்சிங் உள்ளிட்ட பல்வேறு அமைப்பு களை சேர்ந்தவர்கள் வழக்கு தொடுத்திருந்தனர். இவை மதுராவின் சிவில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்கப்பட்டிருந்தது. இதில் மகேந்திர பிரதாப்சிங் நேற்று முன்தினம் புதிதாக ஒரு மனு அளித்துள்ளார். இதில், ஒன்றரை மடங்கு அதிகமாக நிலம் அளித்து மதுராவின் ஷாயி ஈத்கா மசூதியை வேறு இடம் மாற்றக் கோரப்பட்டுள்ளது. இந்த மனு ஜூலை 5-ல் விசாரணைக்கு வருகிறது.

இதற்கு முன் மற்றொரு புதிய மனுவும் கடந்த ஏப்ரல் 1-ல் அளிக்கப்பட்டிருந்தது. இதன்படி, மதுராவிலிருந்த கிருஷ்ண ஜென்ம பூமி கோயிலை, முகலாய மன்னர் அவுரங்கசீப் இடித்ததாக குறிப்பிடப்பட்டது. அப்போது கோயிலின் கிருஷ்ணர் மற்றும் இதர சிலைகளை ஆக்ரா கோட்டையிலுள்ள திவான்-எ-காஸ் எனும் சிறிய மசூதியின் படிகளுக்கு கீழே புதைத்து வைத்ததற்கான வரலாற்று சான்றுகள் இருப்பதாகத் தெரிவித் திருந்தார். இவற்றைமீட்கக் கோரி தம் மனுவில் வலியுறுத்தி இருந்தார்.

மதுராவில் கிருஷ்ணர் பிறந்த இடமாகக் கருதப்படும் இடத்தில் உள்ள கோயிலை கிருஷ்ண ஜென்மஸ்தான் சேவா சன்ஸ்தாவும், அதன் அருகிலுள்ள மசூதியை ஷாஹி ஈத்கா நிர்வாகக் குழுவும் நிர்வகித்து வருகின்றன.

கடந்த 1968-ம் ஆண்டில், கோயிலும், மசூதியும் அருகருகில் மதநல்லிணக்கத்தை போற்றும் வகையில் இவ்விரு அமைப்புகளும் ஒப்பந்தம் செய்து கொண்டன. இந்த ஒப்பந்தம் தற்போதும் செயல்பாட்டில் உள்ளது. இச்சூழலில் அந்த ஒப்பந்தம் தவறான காரணங் களுக்காக போடப்பட்டதாக கூறி அயோத்தி வழக்கின் தீர்ப்பிற்கு பின் வழக்குகள் தொடுக்கப்பட்டு வருகின்றன.

SCROLL FOR NEXT