நாடு முழுவதும் புதிதாக 10 எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகள் விரைவில் திறக்கப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா நேற்று தெரிவித்தார்.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம், மங்களகிரி பகுதியில் புதிய எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்துக்கு ஜே.பி நட்டா நேற்று அடிக்கல் நாட்டினார். 193 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,618 கோடி செலவில் இந்தக் கல்லூரி கட்டப்படுகிறது. பின்னர் அவர் பேசியதாவது:
மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளில் சுகாதாரம் மிகவும் முக்கியமானது. இதனால் டெல்லி போன்ற முக்கிய நகரங்களில் மட்டுமல்லாது, நாடு முழுவதிலும் எய்ம்ஸ் போன்ற மருத்துவமனைகள் இருக்க வேண்டியது அவசியம். இந்தக் காரணத்தால் அடுத்த ஒன்றறை ஆண்டு காலத்திற்குள் நாடு முழுவதும் புதிதாக 10 எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனைகள் திறக்கப்படும்.
ஒவ்வொரு எய்ம்ஸ் மருத்துவ மனையிலும் 900 முதல் 1,000 வரை படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்படும். 70 மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இந்த மருத்துவமனைகளில் பயிற்சி அடிப்படையிலும், கல்வி அடிப்படையிலும் சேர்ந்து பணியாற்றுவர். மாரடைப்பு, சர்க்கரை வியாதிகள் காரணமாக நாட்டில் பலர் உயிரிழக்கின்றனர். புற்று நோய்க்காக ஆந்திராவில் புதிய மருத்துவமனை தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.