மேகாலயாவில் 35 வயது பழங் குடியின பெண் ஒருவர், பாலியல் பலாத்கார முயற்சியின்போது, எதிர்ப்பு தெரிவித்ததால் தலையில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
மேகாலயாவின் தெற்கு காரோ ஹில்ஸ் மாவட்டம், ராஜா ரோங்கத் என்ற கிராமத்தில் செவ்வாய்க்கிழமை மாலை இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. காரோ தேசிய விடுதலைப் படை (ஜி.என்.எல்.ஏ) தீவிரவாதிகள் இந்த கொடூரத்தை நிகழ்த்தியதாக கூறப்படுகிறது.
இப்பெண் செவ்வாய்க்கிழமை மாலை தனது வீட்டில் கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த ஜி.என்.எல்.ஏ. தீவிரவாதிகள் நான்கைந்து பேர், அப்பெண்ணின் கணவர் மற்றும் குழந்தைகளை வீட்டில் வைத்து பூட்டியுள்ளனர். பின்னர் அப்பெண்ணை வெளியில் இழுத்துச் சென்றுள்னர். முதலில் அவரை அடித்து உதைத்த அவர்கள், அவரிடம் அத்துமீறி நடந்துள்ளனர். பின்னர் அப் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றபோது, அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தீவிரவாதிகள், அப்பெண்ணின் தலையில் சரமாரியாக சுட்டுள்ளனர். இதில் அப்பெண் தலை பிளவுபட்டு இறந்ததாக மாநில போலீஸார் புதன்கிழமை தெரிவித்தனர்.
இந்த சம்பவம் அந்த மாநிலத்தில் கொந்தளிப்பை ஏற் படுத்தியுள்ளது.
கடந்த 2012 ஜனவரியில் ஜிஎன்எல்ஏ அமைப்பை மத்திய அரசு பயங்கரவாத இயக்கமாக அறிவித்தது. தடை விதிக்கப்பட்ட இந்த அமைப்பு மேகாலயாவின் 3 காரோ ஹிலஸ் மாவட்டங்களில் கொலை, ஆள்கடத்தல், பணம் பறித் தல் போன்ற வன்செயல்களிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
அரசியல் கட்சிகள் கண்டனம்
“மேகாலயாவில் குழந்தைகள் முன்னிலையில் பெண் பலாத் காரம் செய்யப்பட்டது மற்றும் கொல்லப்பட்டது மிகவும் துரதிருஷ்டவசமானது” என்று காங்கிரஸ் கட்சியின் ஷோபா ஓசா கூறியுள்ளார்.
காரோ ஹில்ஸ் பகுதியின் எம்.பி.பி.ஏ. சங்மா கூறுகையில், “இந்த சம்பவத்தை கடுமையாக கண்டிக்கிறேன். காரோ ஹில்ஸ் பகுதியில் சட்டம் ஒழுங்கு நாளுக்கு நாள் மோசமாகி வருவது மிகவும் கவலை அளிக்கிறது. கடந்த காலங்களில் இதுபோன்ற நிலை இருந்ததில்லை. அங்கு நிலைமையை சமாளிக்க மாநில அரசு தவறிவிட்டது. எனது தலைமையிலான தேசிய மக் கள் கட்சியின் பிரதிநிதிகள் மத்திய உள்துறை இணை அமைச் சர் கிரெண் ரிஜ்ஜுவை சந்தித்து இங்குள்ள நிலவரத்தை விவரிப் பார்கள்” என்றார்.