வெங்கய்ய நாயுடு 
இந்தியா

கடந்த 21-ம் தேதி தடுப்பூசி செலுத்திக்கொண்ட 5-ல் 3 பேர் கிராமவாசிகள் : குடியரசு துணைத் தலைவர் தகவல்

செய்திப்பிரிவு

நாடு முழுவதும் கடந்த 21-ம்தேதி கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 5-ல் 3 பேர்கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் என குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் கரோனா தடுப்பூசி தொடர்பான திருத்தப்பட்ட கொள்கை கடந்த 21-ம் தேதி அமலுக்கு வந்தது. இதன்படி அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த கொள்கை அமலான முதல் நாளில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 88.09 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் 64 சதவீதம் பேர் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவின் அலுவலக ட்விட்டர் பக்கத்தில், “கடந்த 21-ம் தேதி நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 5-ல் 3 பேர் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் என்பது மகிழ்ச்சியாக உள்ளது. மத்திய அரசும் மாநில அரசுகளும் இணைந்து தடுப்பூசி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருவதற்காக பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். கரோனா பாதிப்பிலிருந்து விடுபட, பொதுமக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்” என பதிவிடப்பட்டுள்ளது.- பிடிஐ

SCROLL FOR NEXT