இந்தியா

தொற்று பரவலும், உயிரிழப்பும் சற்று அதிகமானது: கரோனா பாதிப்பு 3 கோடியை தாண்டியது

செய்திப்பிரிவு

இந்தியாவில் நேற்றுமுன்தினம் கரோனா தொற்று குறைந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் சற்று அதிகரித்துள்ளது. இதன்மூலம், நாட்டில் கரோனா வால் பாதிக்கப்பட்டோர் எண் ணிக்கை 3 கோடியை தாண்டியது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று காலை 8 மணிக்கு வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவலின் 2-வது அலை கடந்த 2 மாதங்களாக படிப்படியாக குறைந்து, கடந்த சில நாட்களாக தினசரி தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 50 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. நேற்றுமுன்தினம் 42,640 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். 1,167 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50 ஆயிரத்து 848 ஆக அதிகரித்தது. இதன் மூலம் நாடு முழுவதும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 கோடியே 28,709 ஆக உயர்ந்துள்ளது. இதில், கரோனா தொற்றால் உயிரிழந்த 3 லட்சத்து 90,660 பேரும் அடங்குவர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 1,358 பேர் இறந்துள்ளனர்.

அதேபோல் கடந்த 21-ம் தேதி மட்டும் 86 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த எண்ணிக்கையும் 54 லட்சமாக குறைந்தது. இவற்றையும் சேர்த்து இதுவரை 29 கோடியே 46 லட்சத்து 39,511 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை பெறுவோரின் எண் ணிக்கை 6 லட்சத்து 43,194 ஆக உள்ளது. குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 89 லட்சத்து 94,855 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.

இதற்கிடையில், கடந்த 20-ம் தேதி 16 லட்சத்து 64,360 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் 19 லட்சத்து 1,056 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 39 கோடியே 59 லட்சத்து 73,198 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) நேற்று தெரிவித்தது.

இதற்கிடையில் கரோனா பரவலின் 3-வது அலை விரைவில் வரலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அதுவும் உரு மாறிய ‘டெல்டா பிளஸ்’ எனப்படும் கரோனா வைரஸ் நாட்டின் சில பகுதிகளில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 3-வது அலையை சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் முன் னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. - பிடிஐ

SCROLL FOR NEXT