மேற்குவங்க சட்டப்பேரவையின் செயல்பாடுகளில் ஆளுநர் குறுக் கிடுவதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் பேரவை சபாநாயகர் பிமன் பானர்ஜி புகார் செய்தார்.
மேற்குவங்க ஆளுநர் ஜக்தீப் தன்கருக்கும் முதல்வர் மம்தாவுக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்படுகின் றன. சமீபத்தில் தேர்தலுக்குப் பிந்தைய வன்முறைச் சம்பவங்கள் குறித்து இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. இந்நிலையில், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தலைமையில் மாநில சட்டப் பேரவைகளின் சபாநாயகர்கள் மாநாடு செவ்வாய்க்கிழமை காணொலிக் காட்சி மூலம் நடைபெற்றது. அப்போது, ஆளுநர் குறித்து ஓம் பிர்லாவிடம் மேற்கு வங்க பேரவை தலைவர் புகார் கூறினார்.
இதுகுறித்து கொல்கத்தாவில் நேற்று செய்தியாளர்களிடம் சபாநாயகர் பிமன் பானர்ஜி கூறுகையில், ‘‘சட்டப்பேரவை செயல்பாடுகளிலும் நாடாளுமன்ற ஜனநாயகத்திலும் அளவுக்கு மீறி ஆளுநர் ஜக்தீப் தன்கர் தலையிடுகிறார். சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்களில் ஆளுநர் இன்னும் கையெழுத்திடவில்லை. இதற்கு முன் மேற்குவங்க சட்டப் பேரவை ஜனநாயக வரலாற்றில் இதுபோல் நடந்தது இல்லை. ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் புகார் கூறினேன்’’ என்று தெரிவித்தார். - பிடிஐ