இந்தியா

டெல்லி கிரிக்கெட் சங்க விவகாரம்: தகுதியுள்ள அதிகாரிகளை பரிந்துரைக்க கோபால் சுப்ரமணியம் கோரிக்கை

பிடிஐ

டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்க (டிடிசிஏ) ஊழல் குறித்து விசாரிக்க தகுதிவாய்ந்த அதிகாரிகளை பரிந்துரை செய்யுமாறு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம் கோரிக்கை வைத்துள்ளார்.

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், டிடிசிஏ ஊழல் குறித்து விசாரிக்க கோபால் சுப்ரமணியம் தலைமையில் ஒரு குழுவை அமைத்துள்ளார். இதை ஏற்றுக்கொண்ட சுப்ரமணியம், கேஜ்ரிவாலுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் டிடிசிஏ ஊழல் தொடர்பான விசாரணைக்காக, டெல்லி அரசின் ஊழல் தடுப்புப் பிரிவின் விசாரணை அதிகாரிகள் பட்டியலில் இருந்து 5 பேரை பரிந்துரை செய்யுமாறு கோரி உள்ளார்.

மேலும், இதுதொடர்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

டிடிசிஏ ஊழல் தொடர்பான விசாரணையில் தங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு கூறியிருந்தது. எனவே, இதுவிஷயத்தில் தேவையான உதவிகளை செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதையே இது காட்டுகிறது.

விசாரணையில் வெளியாகும் தகவல் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடையதாக இருக்கலாம். எனவே, இந்த விசாரணைக்கு உதவுவதற்காக தகுதியான அதிகாரிகளை பரிந்துரை செய்ய வேண்டும்.

குறிப்பாக, உளவுத் துறை (ஐபி), சிபிஐ மற்றும் டெல்லி போலீஸ் ஆகியவற்றிலிருந்து தலா 5 சிறந்த அதிகாரிகளின் பெயரை பரிந்துரை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார். இந்த தகவலை கேஜ்ரிவாலுக்கும் தெரிவித்துள்ளார்.

சட்டத்தைப் படிக்க வேண்டும்

இதுகுறித்து பாஜக செயலாளர் ஸ்ரீகாந்த் சர்மா கூறும்போது, “கம்பெனி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள டெல்லி கிரிக்கெட் சங்க ஊழல் குறித்து விசாரணைக் குழு அமைக்க டெல்லி அரசுக்கு சட்டப்படி அதிகாரம் இல்லை. சட்டத்துக்கு புறம்பாக கேஜ்ரிவால் முடிவு எடுத்துள்ளார். அவரை திருப்திபடுத்துவதற்காக கோபால் சுப்ரமணியம் நாடகம் ஆடுகிறார். டெல்லி அரசால் என்னென்ன செய்ய முடியும் என்பது குறித்து கேஜ்ரிவால் முதலில் அரசியலமைப்பு சட்டத்தைப் படித்து தெரிந்துகொள்ள வேண்டும்.

டிடிசிஏ-வில் பாலியல் தொந்தரவு

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கூறும்போது, “எனது தலைமையிலான அரசுக்கும் டிடிசிஏ ஊழலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தலாம். அதைக் கண்டு நாங்கள் அஞ்சமாட்டோம்” என்றார்.

மேலும் அவர் கூறும்போது, “டிடிசிஏ-வில் நிதி முறைகேடு மட்டுமல்லாமல் பாலியல் ரீதியிலான தொந்தரவும் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஒருவரை கிரிக்கெட் குழுவில் தேர்வு செய்வதற்கு பிரதிபலனாக அவரது தாயை உறவுக்கு அழைத்துள்ளனர். இந்தத் தகவலை அந்த இளைஞரின் தந்தையே (மூத்த பத்திரிகையாளர்) என்னிடம் தெரிவித்தார்” என்றார்.

SCROLL FOR NEXT