இந்தியா

கரோனா பொருளாதார பாதிப்பு எதிரொலி- பெண்கள், இளைஞர்கள் மத்தியில் வேலைவாய்ப்பு குறித்த நம்பிக்கை சரிவு: லிங்க்ட்-இன் கருத்துக்கணிப்பில் தகவல்

செய்திப்பிரிவு

கரோனாவுக்குப் பிந்தைய வேலைவாய்ப்பு சூழல் மீது பெண்களும், இளைஞர்களும் நம்பிக்கை இழந்துள்ளதாக லிங்க்ட்-இன் கருத்துக்கணிப்பு முடிவில் தெரியவந்துள்ளது.

லிங்க்ட்-இன் நிறுவனம் பலதரப்பட்ட துறை சார்ந்த பணியாளர்களிடம் வேலைவாய்ப்பு சூழல் குறித்து கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது. கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்ட பதில்களின் அடிப்படையில் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் நிறுவனங்கள் வேலைக்கு எடுக்கும் விகிதம் ஏப்ரல் மாதத்தில் 10 சதவீத அளவுக்குக் குறைவாக இருந்தது. இது மே மாத இறுதியில் 35 சதவீத அளவுக்கு உயர்ந்தது. கரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் தற்போது குறையத் தொடங்கியுள்ளது. ஆனாலும் வேலை சூழல் குறித்த நம்பிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது.

வேலைவாய்ப்பு சார்ந்த நம்பிக்கை குறியீடு கடந்த மார்ச்மாதத்தில் 58ஆக இருந்தது தற்போது 54ஆகக் குறைந்துள்ளதாக லிங்க்ட்-இன் அறிக்கையில் தெரிவித்துள்ளது. குறிப்பாக பொழுதுபோக்கு, வடிவமைப்பு மற்றும் ஊடகம் ஆகிய துறைகளில் வேலைவாய்ப்பு சூழல் நிலையற்றதாக இருப்பதாகக் கூறியுள்ளனர். அதேசமயம் பொருளாதாரத்தின் சில பிரிவுகள் பழைய நிலைக்குத் திரும்பியுள்ளன. மென்பொருள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஹார்டுவேர், நெட்வொர்க்கிங் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்தவர்கள் வேலைசார்ந்த எதிர்காலத்தின் மீது நம்பிக்கை அதிகரித்துள்ளதாகக் கூறுகின்றனர்.

மேலும் வேலைக்குச் செல்லும் பெண்கள், இளைஞர்கள் தங்களின் வேலை சார்ந்த எதிர்காலத்தின் மீது பெரிதும் நம்பிக்கை இழந்துள்ளதாகக் கூறுகின்றனர். இதன்படி பெண்களின் வேலைசார்ந்த நம்பிக்கை குறியீடானது மார்ச்சில் 57ஆக இருந்தது ஜூன் மாதத்தில் 49ஆகக் குறைந்துள்ளது.

ஆண்களின் நம்பிக்கை குறியீடு 58லிருந்து 56ஆகக் குறைந்துள்ளது. கடன், செலவுஅதிகரிப்பு உள்ளிட்ட பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகும் பயம் இருப்பதாக 23 சதவீத பெண்களும் 13 சதவீத ஆண்களும் கூறியுள்ளனர்.

SCROLL FOR NEXT