இந்தியா

நாட்டில் தொடர்ந்து 15-வது நாளாக கரோனா பாதிப்பு விகிதம் 5 சதவீதத்துக்கு கீழ் குறைவு

செய்திப்பிரிவு

நாட்டில் தொடர்ந்து 15-வது நாளாக கரோனா பாதிப்பு விகிதம்5 சதவீதத்துக்கு கீழ் குறைந்தாலும் கரோனா 2-வது அலை முடிந்துவிட்டதாக கருத முடியாது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

கரோனா பாதிப்பு (பாசிட்டிவ்) விகிதம் தொடர்ந்து 15 நாட்களாக 5 சதவீதத்துக்குக் கீழ் குறைந்தால் ஊரடங்கை முற்றிலும் நீக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது. இந்நிலையில், இந்தியாவில் கரோனா புதிய நோயாளிகள் எண்ணிக்கை, கடந்த 91 நாட்களில் குறைந்த அளவாக நேற்று 42,640 ஆக பதிவானது. கரோனா பாதிப்பு விகிதமும் 3.21 சதவீதமாக குறைந்துள்ளது. இதனால் கரோனா 2-வது அலை முடிந்துவிட்டது போலவும், கட்டுப்பாடுகளை நீக்க இது சரியான நேரம் என்பது போலவும் தோன்றலாம். என்றாலும் இதனை மிகுந்தஎச்சரிக்கையுடன் அணுக வேண்டும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

புதிய வகை வைரஸ்கள் உருவாகியிருப்பது, பல மாவட்டங்களில் பாதிப்பு விகிதம் தொடர்ந்து 5 சதவீதத்துக்கு மேல் இருப்பது,புள்ளி விவரங்களின் நம்பகத்தன்மை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை அவர்கள் சுட்டிக்காட்டு கின்றனர்.

டெல்லி சிவநாடார் பல்கலைக் கழக இயற்கை அறிவியல் துறை இணை பேராசிரியர் நாகா சுரேஷ் வீரப்பு கூறும்போது, “இந்தியாவில் கரோனா 2-வது அலை அதன் உச்சத்துக்கு சென்றபிறகு குறைந்து வருகிறது. என்றாலும் அதிகம் பரவக்கூடிய ‘டெல்டாபிளஸ்’ போன்ற கரோனா வைரஸ் வகைகள் தோன்றியுள்ளதால் இதற்கான முடிவு வெகு தொலைவில் இருக்கலாம். கடந்த மார்ச் மாதம் தோன்றிய டெல்டா வகை வைரஸ் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குப் பரவியது. பிறகு 2-வது அலை உச்சத்துக்கு சென்றது. கரோனா முதல் அலையின் பாதிப்பு விகிதம் 1% ஆக இருக்கும்போது, 2-வது அலை தோன்றியதை நாம் கவனிக்கத் தவறிவிட்டோம்” என்றார்.

பொதுக் கொள்கை நிபுணர் சந்திர காந்த் லகாரியா கூறும்போது, “தேசிய அளவில் பாசிட்டிவ்விகிதம் 5 சதவீதத்துக்கு குறைவாக இருந்தாலும் இன்னும் பலமாவட்டங்களில் இது 5 சதவீதத்துக்கு அதிகமாக உள்ளது. எனவே 2-வது அலை முடிந்துவிட்டதாக அறிவிப்பதற்கு முன், அனைத்து மாவட்டங்களிலும் 5 சதவீதத்துக்கு கீழ் குறைந்து, அது 2 வாரங்களுக்கு நீடிக்கும் வரை நாம் காத்திருக்க வேண்டும்” என்றார்.

விஞ்ஞானி கவுதம் மேனன் கூறும்போது, “கேரளா போன்ற சில மாநிலங்களில் இப்போதும் கரோனா பாசிட்டிவ் விகிதம் 5 சதவீதத்துக்கு மேல் உள்ளது. இது,அங்கு பரிசோதனை வசதிகள் சிறப்பாக உள்ளதா அல்லது அங்கு நிலைமை மேம்பட வேண்டுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. நாங்கள் அறிந்தவரை, கிராமப்புற மற்றும் நகர்ப்புற இந்தியாவில் இது உண்மையான சரிவுதான். அலை என்பதற்கு எந்தவிதமான வரையறையும் இல்லை.அது எப்போது முடியும் என்பதை தவிர்த்துவிடலாம். கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டு வருவதாக இருந்தால் அதை மிகுந்த எச்சரிக்கையுடன் செய்ய லாம்” என்றார்.

SCROLL FOR NEXT