வரும் டிசம்பர் மாதத்துக்குள் இந்தியாவில் 257 கோடி டோஸ் தடுப்பூசி கிடைக்கும் என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள ஆர்எம்எல் மருத்துவமனையில் உள்ள கரோனா தடுப்பூசி முகாமை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று முன்தினம் பார் வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:
கரோனா தடுப்பூசி அறிமுக மானபோது எதிர்க்கட்சித் தலை வர்கள் சிலர், அதுகுறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பினர். ஆனால் அவர்கள் பின்னர் தடுப்பூசியை செலுத்திக் கொண்டனர். இப்போது உங்கள் மன நிலையில் மாற்றம் ஏற்பட்டுவிட்டதா எனஅவர்களிடம் கேட்க விரும்புகிறேன்.
கரோனா தொற்றால் நாட்டு மக்கள் பாதிக்கப்பட்ட தருணத்தில் அரசியல் கட்சியினர் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர். ஆனால் பாஜக தொண்டர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து களத்தில் இறங்கி பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்தனர்.
மேலும் கரோனா தொற்றில் இருந்து தப்பிக்க அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார். இதன்படி, தடுப்பூசி திட்டத்தை அமல்படுத்த பாஜக தொண்டர்கள் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
கரோனா பாதிப்பு ஏற்பட்ட9 மாதங்களிலேயே 2 தடுப்பூசிகளை இந்திய நிறுவனங்கள் கண்டுபிடித்தன. உலகிலேயே மிகப்பெரிய மற்றும் அதிவேகமான தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எதிர்க்கட்சியினர் தவறாக வழிநடத்தியபோதிலும், பிரதமரின் வேண்டுகோளை ஏற்று பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர்.
வரும் டிசம்பர் மாதத்துக்குள் 257 கோடி தடுப்பூசி இந்தியாவில் கிடைக்கும். இதன்மூலம் நாட்டில் உள்ள 130 கோடி மக்களுக்கும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திவிட முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.- பிடிஐ