ஆந்திர அரசின் மக்கள் விரோத செயலைக் கண்டித்து வரும் 29-ம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
ஹைதராபாத்தில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) தலைவர் சந்திரபாபு நாயுடு தனது கட்சி நிர்வாகிகளுடன் காணொலி மூலம் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:
நலத்திட்டங்கள் என்ற பெயரில் முதல்வர் ஜெகன் மோகன் தலைமையிலான அரசு மக்களை ஏமாற்றி வருகிறது. கடுகளவு செய்து விட்டு கடலளவு விளம்பரத்தை தேடிக்கொள்கிறது ஜெகன் அரசு. முதல்வர் ஜெகன் மோகனின் இந்த செயலை கண்டித்து கண்டித்து வரும் 29-ம் தேதி 175 தொகுதிகளிலும் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
கரோனாவை கட்டுப்படுத்து வதிலும், தடுப்பூசி வழங்குவதிலும் ஆந்திரஅரசு தோல்வி அடைந்து விட்டது. ஆனால், ஒரு வாரம் வரை தடுப்பூசிகள் வழங்காமல், ஒரே நாளில் அனைத்து தடுப்பூசிகளையும் வழங்கி அதனை சாதனை என கூறிக் கொள்கிறது. ஆந்திராவில் கரோனா மரணங்கள் அரசு கூறுவதை விட 14 சதவீதம் அதிகமாக உள்ளது. ஆந்திராவில் எங்கு பார்த்தாலும் குற்றங்கள் அதிகரித்து விட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.