ராபர்ட் ரோமாவியா ராய்டே 
இந்தியா

அதிக குழந்தை பெற்றவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு: மிசோரம் அமைச்சர் ராபர்ட் ரோமாவியா ராய்டே அறிவிப்பு

செய்திப்பிரிவு

தனது தொகுதியில் அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்ட பெற்றோருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என மிசோரம் விளையாட்டுத் துறை அமைச்சர் ராபர்ட் ரோமாவியா ராய்டே அறிவித்துள்ளார்.

நாட்டில் பல மாநிலங்கள் மக்கள் தொகையை கட்டுப்படுத்து வதற்கான கொள்கையை வெளி யிட்டு வருகின்றன. இந்நிலையில் உலக தந்தையர் தினத்தை முன்னிட்டு மிசோரம் மாநிலத்தில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் ராய்டே பேசும்போது, “எனது அய்ஸ்வால் கிழக்கு (2) தொகுதி யில் அதிக குழந்தைகள் கொண்ட பெற்றோருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும். அவர்களுக்கு சான்றிதழும் கேடயமும் வழங்கப்படும். இதற்கான செலவை எனது மகன் நடத்தும் கட்டுமான ஆலோசனை நிறுவனம் ஏற்கும்” என்றார்.

இது தொடர்பாக அமைச்சர் மேலும் கூறும்போது, “மிசோ மக்களிடையே கருவுறாமை விகிதம் அதிகரித்துள்ளது. மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறைந்து வருகிறது. இது கவலைக்குரியதாக உள்ளது. மிசோரம் மாநிலத்தின் மக்கள் தொகை படிப்படியாக குறைந்து வருவதால் பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைந்த மக்களின் எண்ணிகையும் குறைவாக உள்ளது. மிசோ போன்றசிறிய சமூகத்தினர் அல்லதுபழங்குடியினரின் முன்னேற்றத்துக்கு குறைந்த மக்கள் தொகை ஒரு தடையாக உள்ளது” என்றார்.

பல்வேறு மிசோ பழங்குடியினரின் தாயகமாக மிசோரம் உள்ளது. 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மிசோரம் மாநிலத்தில் 10 லட்சத்து 91,014 பேர் உள்ளனர். மாநிலத்தின் மொத்தப் பரப்பளவு சுமார் 21,087 சதுர கி.மீ. ஆகும். இதன்படி 1 சதுர கி.மீட்டரில் 52 பேர் மட்டுமே வசிக்கின்றனர். அருணாச்சல பிரதேசத்தை தொடர்ந்து, நாட்டில் மக்கள் தொகை அடர்த்தி குறைந்த 2-வது மாநிலமாக மிசோரம் உள்ளது. தேசிய சராசரி சதுர கி.மீட்டருக்கு 382 ஆக இருக்கும் வேளையில், அருணாச்சலில் 17 ஆக உள்ளது.

மிசோரம் மாநிலத்தின் அண்டை மாநிலமான அசாம் வேறு பாதையில் செல்கிறது. இம்மாநில முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா அண்மையில் கூறும்போது, “இரண்டு குழந் தைகள் கொள்கையை அரசு படிப்படியாக அமல்படுத்த உள் ளது. அரசின் சில நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு இது அவசியமாக்கப்பட உள்ளது” என்றார்.

ஒரு குடும்பத்தில் இரண்டுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், அவர்களுக்கு 2021 ஜனவரி முதல் அரசு வேலைவாய்ப்பு இல்லை என அசாம் அரசு கடந்த 2019-ல் அறிவித்தது.

SCROLL FOR NEXT