2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக அடுத்த ஆண்டு நடைபெறும் உ.பி. சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகளின் புதிய அணி உருவாகிறது. இதற்காக எதிர்க்கட்சிகளின் கூட்டத்துக்கு சரத் பவார் நாளை அழைப்பு விடுத்துள்ளார்.
அண்மையில் முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் தமிழகம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்கள் முக்கியத்துவம் பெற்றன. இங்கு திமுக மற்றும் திரிணமூல் காங்கிரஸுக்காக பிரச்சார வியூகம் அமைத்தார் பிரஷாந்த் கிஷோர்.
ஆனால் அரசியல் வியூகப் பணியில் இருந்து விலகப் போவதாகவும், இனிமேல் குடும்பத்தினருடன் காலத்தைச் செலவிடவுள்ளேன், ஐபேக் நிறுவனத்தை அதில் உள்ள மற்ற நண்பர்கள் நடத்துவார்கள் என்று பிரசாந்த கிஷோர் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது பிரசாந்த் கிஷோர் மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை அண்மையில் சந்தித்துப் பேசினார். இதுபற்றிப் பிரசாந்த் கிஷோர் தரப்பில் கூறும்போது, ''மேற்கு வங்கம் மற்றும் தமிழகத் தேர்தலில் மம்தா மற்றும் ஸ்டாலினுகு ஆதரவுக் கரம் நீட்டிய ஒவ்வொரு எதிர்க்கட்சித் தலைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாகவே இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது'' என்று தெரிவித்தனர்.
மிஷன் 2024 எனப்படும் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டிய திட்டமிடல் என தகவல் வெளியானது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை எதிர்த்து வலிமையுடன் போராட எதிர்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைப்பது பற்றியும் எதிர்க்கட்சிகளின் சார்பில் பிரதமர் வேட்பாளர் குறித்து இந்தச் சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகின.
இந்தநிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், பிரசாந்த் கிஷோரை மீண்டும் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு வார இடைவெளியில் இரண்டாவது முறை சந்திப்பு நடைபெற்றுள்ளது.
ரகசியமாக நடந்த இந்த சந்திப்பின்போது அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பிரதமர் வேட்பாளராக யார் என்பது பற்றிய விவாதம் நடந்ததாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உ.பி. சட்டப்பேரவைத் தேர்தலின்போதே பாஜகவுக்கு எதிரான வலிமையான அணியை கட்டமைக்கவும் ஆலோசனை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேற்குவங்க மாநிலத்தில் அண்மையில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மம்தா பானர்ஜி மீண்டும் பெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில் அவரை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவது பற்றி விவாதிக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா மற்றும் ராஷ்ட்ரீய ஜனதாதளக் கட்சியின் மூத்த தலைவர் ஜா ஆகியோருடனும் சரத் பவார் ஆலோசனை நடத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் கூட்டத்துக்கு சரத் பவார் அழைப்பு விடுத்துள்ளார். ஆம் ஆத்மி, திரிணமூல் காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட பல்வேறு கட்சி்த் தலைவர்களையும் நாளை சந்தித்து சரத் பவார் ஆலோசனை நடத்தவுள்ளார்.