உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டும் பணியை ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை மேற் பார்வையிடுகிறது. கோயில் கட்டுவதற்கு வாங்கப்பட்ட நிலத் தில் ஊழல் நடந்துள்ளதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது. இதனை அறக்கட்டளை மறுத்துள்ளது.
இந்நிலையில் அயோத்தி ராமர் கோயில் கட்டுமான செலவு குறித்து விசாரணை கோரி அலாகாபாத் உயர் நீதிமன்றத்தை அணுக, சுவாமி அவிமுக்தேஷ்வரானந்த் தலைமையிலான சாதுக்கள் திட்டமிட்டுள்ளனர். இதனை சுவாமி அவிமுக்தேஷ்வரானந்த் நேற்றுமுன்தினம் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறும்போது, ராம ஜென்மபூமி வளாகத்தில் வரலாற்று சிறப்பு மிகுந்த கோயில்கள் இடிக்கப்பட்டுள்ளன. அவை மீண்டும் கட்டப்படவும் புனரமைக்கப்படவும் வேண்டும்” என்றார்.
இவர், ராமாலயா அறக் கட்டளை தலைவர் சங்கராச் சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதியின் சீடரும் ஆவார். அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் அறக்கட்டளை விடுபடும்வரை, கோயிலுக்கு பாது காவலரை நியமிக்க வேண்டும் என ராமாலயா அறக்கட்டளை கோரியுள்ளது. இந்நிலையில் ராம ஜென்மபூமி அறக்கட்டளையின் தலைவருக்கான செய்தித் தொடர்பாளர் மகந்த் கமல் நயன் தாஸ் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.