கரோனாவால் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் மாநில அரசுகளால் ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர்கள் ரீபக் கன்சால், கவுரவ் பன்சால்சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்தமனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், இதுகுறித்து பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இதன்படி, மத்திய அரசு 183 பக்கங்கள் கொண்ட பதில் மனுவை உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் இரவு தாக்கல் செய்தது. அதில் கூறியிருப்பதாவது:
பூகம்பம், வெள்ளம் உள்ளிட்ட இயற்கைப் பேரிடரில் சிக்கிஉயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க பேரிடர் மேலாண்மை சட்டத்தில் வழி வகை செய்யப்பட்டுள்ளது. பொதுவாக குறிப்பிட்ட பகுதியில், குறிப்பிட்ட காலத்தில் இயற்கைப் பேரிடர் நிகழும். ஆனால் கரோனா பரவல் உலகம் முழுவதும் நிகழ்கிறது. அனைத்து மாநிலங்களிலும் நிகழ்கிறது. உயிரிழப்பு தொடர்கதையாக இருக்கிறது.
நாடு முழுவதும் கரோனா தொற்றால் இதுவரை 3.85 லட்சம்பேர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. எனவே, உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் இந்த சட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோருவது பொருத்தமாக இருக்காது. மேலும் பல்வேறு நோய்களால் உயிரிழப்பு ஏற்படும் நிலையில், இந்த நோயால் உயிரிழப்போருக்கு மட்டும் இழப்பீடு வழங்குவது சரியாக இருக்காது.
கரோனா தொற்று காரணமாக ஏழை பணக்காரர் வித்தியாசமின்றி அனைத்து தரப்பைச்சேர்ந்தவர்களும் உயிரிழந்துள்ளனர். கரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு தேவையான உதவியைசெய்ய மத்திய அரசு தயாராகஉள்ளது. ஆனால், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க முடியாது.
மேலும் தொடர் ஊரடங்கால் வரி வருவாய் குறைந்துள்ளதுடன் மாநில அரசுகளின் சுகாதார செலவு பன்மடங்கு அதிகரித்துள்ளது. இந்த சூழலில் கரோனாவால் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் மாநில அரசுகளால் ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க முடியாது.
கரோனா தொடர்பான கொள்கைகளை மத்திய அரசுதான் வகுக்கும் என்றும் இதில் தலையிட முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே கூறியிருந்ததை நினைவுபடுத்துகிறோம்.
மேலும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் பெயரில் வழங்கப்படும் இறப்பு சான்றிதழில், ‘கரோனா இறப்பு’ என குறிப்பிடப்படும். அவ்வாறு சான்றிதழில் குறிப்பிடாத மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு மத்திய அரசு தனது பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
கரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என மத்திய பிரதேச அரசு ஏற்கெனவே அறிவித்தது. இதுபோல, ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.- பிடிஐ