இந்தியா

சல்மான் கான் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு: மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு

சோனம் சைகல்

2002-ம் ஆண்டு கார் விபத்து வழக்கில் சல்மான் கான் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மகாராஷ்டிர அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக மும்பை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

குடிபோதையில் வாகனம் ஓட்டிச் செல்பவர்களால் ஏற்படும் விபத்துகள் அதிகரித்து வருவது குறித்து மும்பை உயர் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது மகாராஷ்டிர மாநில அரசு வழக்கறிஞர் ஏ.பி.வாக்யானி, நீதிபதிகள் அபய் ஓகா, கவுதம் படேல் அடங்கிய அமர்விடம் சல்மான் விடுதலையை எதிர்த்து உச்ச நீதீமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக தெரிவித்தார்.

2002-ம் ஆண்டு மும்பை பாந்த்ரா பகுதியில் நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது காரை ஏற்றியதாக சல்மான் கான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழக்க 4 பேர் காயமடைந்தனர்.

இந்த வழக்கில் மும்பை அமர்வு நீதிமன்றம் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.25,000 அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் சல்மான் கான் மேல்முறையீடு செய்தார். ஆனால் போதிய ஆதாரங்களை அரசு நிரூபிக்கத் தவறியதாகக் கூறி டிசம்பர் 10-ம் தேதி சல்மான் கானை விடுவித்து தீர்ப்பளித்தது.

தற்போது இந்த விடுதலைத் தீர்ப்பை எதிர்த்தே மகாராஷ்டிர அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு செய்யப் போவதாக அறிவித்துள்ளது.

SCROLL FOR NEXT