இந்தியா

பாதுகாப்பை மீறி டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்த குரங்கு: வீடியோ வைரல்

ஆர்.ஷபிமுன்னா

டெல்லி மெட்ரோ ரயிலில் கடும் பாதுகாப்புகளை மீறி ஒரு குரங்கு உள்ளே நுழைந்து பயணம் செய்துள்ளது. அப்போது சகபயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாத வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நாட்டின் தலைநகரான டெல்லியின் பல பகுதிகளில் பாதுகாப்பு போலீஸாரின் கண்காணிப்புகள் அதிகம். குறிப்பாக இங்கு ஓடும் மெட்ரோ ரயில்நிலையங்களில் மத்திய பாதுகாப்பு படையினரின் தீவிர சோதனைகளும் உண்டு.

இதனால், ரயிலில் பயணம் செய்ய அதன் உள்ளே நுழையும் பயணிகள் பல்வேறு சோதனைகளுக்கு உள்ளாவது உண்டு. இச்சூழலில், அதனுள் மத்திய பாதுகாப்பு படையினரை மீறி ஒரு குரங்கு உள்ளே நுழைந்துள்ளது.

இக்குரங்கு அப்பாதுகாப்பு பகுதியில் உள்ளே நுழைந்தது மட்டும் இன்றி, மெட்ரோ ரயிலிலும் ஜாலியாகப் பயணித்துள்ளது. இந்த சம்பவம், நேற்று மாலை யமுனா பாலம் மற்றும் இந்திரபிரஸ்தாவிற்கு இடையிலான புளூ லைன் தடத்தில் ஏற்பட்டுள்ளது.

இந்த தகவல் டெல்லி மெட்ரோ ரயில் அதிகாரிகளுக்கு உடனடியாக அளிக்கப்படவில்லை எனத் தெரிகிறது. வழக்கமாக ரயிலின் உள்ளே நுழையும் பயணிகள் இடையே அதன் இருக்கைகளை பிடிக்க போட்டி இருப்பது உண்டு.

இந்நிலையில், பொதுமக்களை மீறி உள்ளே நுழைந்த அக்குரங்கு எப்படியோ தனக்காக ஒரு இருக்கையையும் பிடித்து அமர்ந்து கொண்டது. இதை பார்த்து ஆச்சரியப்பட்ட பொதுமக்கள் அக்குரங்கின் செயல்பாடுகளை தம் கைப்பேசிகளில் வீடியோ எடுத்துள்ளனர்.

நல்லவேளையாக அக்குரங்கு உள்ளே இருந்த சகபயணிகளுக்கு எந்த தொல்லையும் தராமல் அமைதியாகப் பயணம் செய்துள்ளது.

கரோனாவின் இரண்டாவது அலையினாலும் நிறுத்தப்பட்ட டெல்லி மெட்ரோ மீண்டும் ஓடத் துவங்கி உள்ளது. இதில், கரோனாவிற்காக சமூக இடைவெளி உள்ளிட்டப் பாதுகாப்பு நடவடிக்கைகள் பயணிகள் மேற்கொண்டு வருகின்றன.

இரண்டு பயணிகளுக்கு இடையே உள்ள ஒரு இருக்கை காலியாகவும் வைக்கப்படுகிறது. இந்த முறையை ரயிலில் ஏறியக் குரங்கு தன்னையும் அறியாமல் கடைப்பிடித்திருந்தது.

இதை கண்டு ரயிலில் குரங்குடன் லேசனா அச்சத்துடன் பயணம் செய்த பயணிகள் ஆச்சரியப்பட்டுள்ளனர். இந்த தகவல் பாதுகாப்பு படையினருக்கு அளிக்கப்பட்டு குரங்கை வெளியேற்றியது எப்படி என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.

SCROLL FOR NEXT