இந்தியா

கங்கை தசரா; கரோனா பரவலால் வாரணாசியில் புனிதக் குளியலுக்கு அனுமதி இல்லை

ஆர்.ஷபிமுன்னா

இன்று இந்துக்களுக்கான நிர்ஜலா ஏகாதேசியை முன்னிட்டு நாடு முழுவதிலும் கங்கைக்கான தசரா கொண்டாட்டம் நடைபெறுகிறது. இதற்காக உத்தரப்பிரதேசம் வாரணாசியின் கங்கை கரைகளில் புனித நீராடலுக்கு அனுமதிக்கப்படவில்லை.

உபியில் பிரதமர் நரேந்தர மோடியின் மக்களவை தொகுதியாக இருப்பது காசி எனும் வாரணாசி. இங்கு கரோனாவின் இரண்டாவது பரவலில் அதிக தாக்கம் இருந்தது.

இதனால் பல உயிர்கள் பலியாகி இருந்தன. இவர்கள் உடல்களை வாரணாசியை சுற்றியுள்ள பகுதிகளின் கங்கை கரைகளில் பலர் புதைத்தனர். குறைந்த ஆழத்திலிருந்த பல உடல்கள் மழை மற்றும் காற்றில் வெளியே தெரிந்து சர்ச்சையானது.

இதுபோன்ற காரணங்களினால் இன்று கொண்டாடப்படும் கங்கைக்கான தசராவில் வாரணாசியில் புனித நீராடல் அனுமதிக்கப்படவில்லை. இதன் முக்கியக் கரைகளான தஸ்அசுவமேத காட், அஸ்ஸீ காட், பிரயாக் காட், ஷீத்லா காட், துளசி காட், ஹரிச்சந்திரா காட் உள்ளிட்டவையில் தடுப்புகள் போடப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதனால், புனித நீராடலுக்காக ஆர்வமுடன் வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இவர்கள் அனைவரையும் கரைகளின் எல்லைகளில் போலீஸார் குவிக்கப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டனர்.

எனினும், பிண்ட தானம் உள்ளிட்ட சில முக்கிய பூசைகளுக்கு வந்தவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். இதற்கான எச்சரிக்கை ஒலிபெருக்கிகள் வாயிலாக தொடர்ந்து வாரணாசி போலீஸாரால் அறிவிக்கப்படுகிறது.

கரோனாவின் முதல் பரவலிலும் வாரணாசியில் பாதிப்புகள் இருந்தன. இதனால், கடந்த வருடமும் இந்த கங்கைக்கான தசரா நாளில் புனித நீராடலுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.

SCROLL FOR NEXT