உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கங்கா தசராவை முன்னிட்டு சமூக இடைவெளியை மறந்து மக்கள் புனித நீராடலில் ஈடுபட்டனர்.
உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கங்கை ஆற்றில் அண்மையில் கும்பமேளா நடந்தது. ஏப்ரல் 1 முதல் 30-ம் தேதி வரை நடந்த இந்த திருவிழாவில் கரோனா பரவலுக்கு மத்தியிலும் சுமார் 70 லட்சம் பக்தர்கள் பங்கேற்று புனித நீராடினர்.
தொடக்கத்தில் கரோனா பரிசோதனையில் தொய்வு இருந்த நிலையில் உத்தரகண்ட் உயர்நீதிமன்றம் தினமும் 50 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்ய உத்தரவிட்டது.
இதனையடுத்து 24 தனியார் ஆய்வகங்கள் பணியமர்த்தப்பட்டன. இவற்றில் 14 ஆய்வகங்கள் மாவட்ட நிர்வாகம் சார்பிலும் 10 ஆய்வகங்கள் கும்பமேளா நிர்வாகம் சார்பிலும் நியமிக்கப்பட்டன.
இதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்ததை அடுத்து இதுகுறித்து விசாரிக்க மூன்று பேர் அடங்கிய குழுவை உத்தரகண்ட் அரசு அமைத்தது.
இதில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று பாதிப்பு இல்லை என போலி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள விவரம் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், வடமாநிலங்களில் கொண்டாடப்பபடும் கங்கா தசராவை முன்னிட்டு ஹரித்துவாரில் கங்கா தசராவை முன்னிட்டு சமூக இடைவெளியை மறந்து மக்கள் புனித நீராடலில் ஈடுபட்டனர்.
ஹரித்துவார் மட்டுமின்றி கங்கை பாயும் உத்தரகாண்ட், உத்தர பிரதேச மாநிலங்களில் பல இடங்களிலும் மக்கள் புனித நீராடி வருகின்றனர். கரோனா பாதிப்புகள் அதிகரிக்க கூடிய வகையில் கரோனா விதிகளை மீறி மக்கள் ஒரே இடத்தில் குவிந்துள்ளனர்.
3-வது அலை இந்தியாவை பாதிக்க கூடிய சாத்தியம் உள்ளது என நிபுணர்கள் கூறும் சூழலில் மக்கள் மீண்டும் குவியத் தொடங்கியுள்ள நிலையில் மக்கள் விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என உத்தரகண்ட் அரசு வலியுறுத்தியுள்ளது.
இதுபற்றி அம்மாநில காவல்துறை உயரதிகாரி கூறியதாவது:
கரோனா விதிகளை பின்பற்றும்படி மக்களை நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். வீடுகளிலேயே புனித நீராடும்படி மக்களிடம் நாங்கள் கேட்டு கொண்டுள்ளோம். கரோனா பாதிப்பு இல்லை என்பதற்கான ஆர்.டி.-பி.சி.ஆர். சான்றிதழ்கள் வைத்திருப்பவர்களை மட்டுமே எல்லை பகுதியில் நாங்கள் அனுமதிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.