கரோனா தொற்று குறைந்து ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் பொதுமக்கள் விதிமுறைகளை தொடர்ந்து கடைப்பிடிக்க அறிவுறுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது.
நாடு முழுவதும் வேகமாக பரவிய கரோனா 2-வது அலை படிப்படியாக குறைந்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் படிப்படியாக தளர்த்தி வருகின்றன.
இந்த சூழ்நிலையில், மத்திய உள் துறை செயலாளர் அஜய் குமார் பல்லா அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமைச் செயலாளர்களுக்கும் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் தளர்த்தி வருகின்றன. கள நிலவரங்களை நன்றாக ஆய்வு செய்துஅதன் அடிப்படையில் கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது அல்லது தளர்த்துவது குறித்து முடிவு செய்ய வேண்டும். கரோனா பாதிப்பு குறைந்து வரும் பகுதியில் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டியது அவசியம் என்றால், அனைத்து விதிமுறைகளும் பின்பற்றப்படுகின்றனவா என்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.
கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட சில மாநிலங்களில், முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளி உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்றாமல் பொதுமக்கள் உலவுவதைப் பார்க்க முடிகிறது. பொதுமக்கள் மத்தியில் கரோனா முடிவுக்கு வந்து விட்டது என்ற மனநிறைவு ஏற்படுவதை அனுமதிக்கக் கூடாது. தளர்வுகளை அறிவிக்கும்போது, கரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என மாநில அரசுகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
எந்தப் பகுதியிலாவது கரோனாபாதிப்பு மீண்டும் அதிகரிக்கிறதா என்பதை மாநில அரசுகள் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும்.எந்தப் பகுதியிலாவது கரோனாபாதிப்பு அதிகரிப்பது தெரியவந்தால், சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டுதல்படி, அங்கேயே பரிசோதனை மேற்கொண்டு அப்பகுதியை தனிமைப்படுத்த வேண்டும்.
நாட்டு மக்கள் அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி செலுத்த மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மத்திய அரசின் உத்தரவுகளை அமல்படுத்த வேண்டும் என அனைத்து மாவட்ட மற்றும் வட்ட அளவிலான அதிகாரிகளுக்கு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.- பிடிஐ