இந்தியா

கோவிஷீல்டு கரோனா தடுப்பூசி 2-வது தவணைக்கு 16 வார இடைவெளி சரியான நடவடிக்கைதான்: அஸ்ட்ராஜெனிகா தலைவர் டாக்டர் ஆண்ட்ரூ பொலார்டு கருத்து

செய்திப்பிரிவு

கரோனா தடுப்பூசி கோவிஷீல்டு மருந்தின் முதல் தவணைக்கும் இரண்டாவது தவணைக்கும் இடையிலான கால அவகாசம் 12 முதல் 16 வாரம் வரை இருப்பது சரியான நடவடிக்கைதான் என்று அஸ்ட்ராஜெனிகா நிறுவன தலைவர், டாக்டரும் பேராசிரியருமான ஆண்ட்ரூ பொலார்டு தெரிவித்தார்.

மிக அதிக மக்கள் தொகை உள்ள இந்தியா போன்ற நாடுகளில் முதல் தவணை தடுப்பூசி போட்டு அடுத்த தவணைக்கு 16 வார இடைவெளி அளிப்பது மிகச் சரியான நடவடிக்கைதான். இதன் மூலம் பெரும்பாலான மக்களுக்கு தடுப்பூசி போட முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் மிக அதிக எண்ணிக்கையிலானோருக்கு தடுப்பூசி போடப்படவில்லை. இந்நிலையில் அனைவரையும் காக்க முதல் தவணை ஊசியை முதலில் போட வேண்டும்.

இதன் மூலம் கரோனா வைரஸின் டெல்டா வேரியன்ட் வகை பரவுவதை தடுக்க முடியும். இதன் மூலம் கரோனா பரவல் அதிகரிப்பைக் குறைக்க முடியும் என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்தியாவில் இதுவரை 26.89 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் பேராசிரியரும், குழந்தைமருத்துவ நிபுணருமான பொலார்டு, அஸ்ட்ராஜெனிகா நிறுவனம், கரோனா வைரஸ் தடுப்பூசியில் ஒரு முறை போடக் கூடிய தடுப்பூசியை இன்னமும் உருவாக்கவில்லை என்று குறிப் பிட்டார்.

2 டோஸ் தடுப்பூசி போட வேண்டியது அவசியம். முதலாவது டோஸ் கரோனா தொற்றுஏற்படாமல் இருக்கவும், அடுத்தது மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகவும் உதவும் என்று குறிப்பிட்டுள்ளார்.

தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ள சூழலில் பெருமளவிலான மக்களுக்கு தடுப்பூசி போட வேண்டிய அவசியம் உள்ளது.

இதனால் முதல் டோஸ் தடுப்பூசிக்கும், இரண்டாவது டோஸ் தடுப்பூசிக்கும் இடை யிலான கால அவகாசம் அதிகரிப்பதன் மூலம் அதிக எண்ணிக்கையிலானோருக்கு போட வசதி ஏற்படும்.

இந்தியாவில் அஸ்ட்ராஜெனிகா நிறுவனம் தயாரித்து அளிக்கும் கோவிஷீல்டு தடுப்பு ஊசியானது, கரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற வேண்டிய சூழலிலிருந்து 70 சதவீதம் வரை காப்பாற்றும்.

கரோனா வைரஸில் பலப்பல வேரியன்ட் உருவெடுப்பது தவிர்க்க முடியாது. இதனால் முறையான தடுப்பூசி மட்டும்தான் பாதுகாப்பை அளிக்கும். வைரஸ் பரவலைக்குறைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

SCROLL FOR NEXT