இந்தியா

கரோனா தடுப்பூசி திட்டத்தை சீர்குலைக்க எதிர்க்கட்சிகள் சதி: பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

பாஜக எம்.பி.க்கள், மூத்த தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பேசியதாவது:

கரோனா வைரஸுக்கு எதிராக மிக தீவிரமாகப் போரிட்டு வருகிறோம். இந்த இக்கட்டான நேரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடி வருகின்றன. ஊரடங்கு அமல் செய்யப்பட்டால், ஏழைகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.

ஊரடங்கு அமல் செய்யப்படாவிட்டால், கரோனா வைரஸ் பரவுவதாக புகார் கூறுகின்றனர். கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பொய்களையும் வதந்திகளையும் பரப்பி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றன.

கரோனா தடுப்பூசி திட்டத்தைக்கூட எதிர்க் கட்சி தலைவர்கள் விட்டு வைக்கவில்லை. தடுப்பூசி தொடர்பாக எதிர்மறையான தகவல்களை பரப்பி வருகின்றனர். தடுப்பூசியில் கன்றுக்குட்டியின் நிணநீர் இருப்பதாக கூறுகின்றனர். தடுப்பூசியின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்புகின்றனர்.

தடுப்பூசிகளை நாங்களே நேரடியாக கொள்முதல் செய்து கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டோர் வலியுறுத்தினர்.

அவர்களின் கோரிக்கையை ஏற்று அனைத்து மாநில அரசுகளும் நேரடியாக கரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியது. ஆனால் மாநில அரசுகளால் தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய முடியவில்லை.மேலும் கூடுதல் நிதிச் சுமை ஏற்படுவதாக மாநில அரசுகள் குற்றம் சாட்டின. இதைத் தொடர்ந்து மத்திய அரசே கரோனா தடுப்பூசிகளை வாங்கி மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்தியில் ஆளும் பாஜக அரசு, மக்களுக்கு சேவையாற்றுவதில் மட்டுமே அக்கறை செலுத்தி வருகிறது. ஆனால் எதிர்க்கட்சிகள் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி கரோனா தடுப்பூசி திட்டத்தை சீர்குலைக்க சதி செய்து வருகின்றன.

‘‘தடுப்பூசிகளை செலுத்தி கொள்ள நாங்கள் எலிகள் கிடையாது’’ என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மணீஷ் திவாரி, சசி தரூர் உள்ளிட்டோர் கூறுகின்றனர். இதன்மூலம் மக்களிடையே அச்சத்தை அவர்கள் விதைக்கின்றனர். மக்களை தவறாக வழி நடத்திவருகின்றனர். எதிர்க்கட்சிகளின் நாடகத்தை மக்களிடையே அம்பலப்படுத்த வேண்டும். அவர்களின் சதியை முறியடிக்க வேண்டும்.

கரோனா வைரஸ் பரவல் குறித்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கிறது. முக்கிய அறிவுறுத்தல்களை வழங்குகிறது. ஆனால் பெரும்பாலான மாநில அரசுகள் எச்சரிக்கையாக செயல்படாமல், மத்திய அரசு மீது வீண் பழி சுமத்துகின்றன.

கரோனா காலத்தில் பாஜக எம்.பி.க்கள், தலைவர்கள், தொண்டர்கள் மக்களோடு இருந்து அவர்களுக்கு சேவையாற்றி வருகின்றனர். ஆனால் எதிர்க் கட்சிகள் தலைவர்கள் தலைமறை வாகிவிட்டனர்.மத்திய அரசின் அதிதீவிர நடவடிக்கைகளால் கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளின் உற்பத்தி கணிசமாக அதிகரிக்கப் பட்டிருக்கிறது. ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியும் அறிமுகம் செய்யப் பட்டுள்ளது.

புதிதாக 2,084 கரோனா மருத்துவமனைகள் தொடங்கப்பட்டுள் ளன. பி.எம்.கேர்ஸ் நிதியின் மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் 130 கோடி இந்தியர்களுக்கும் கரோனா தடுப்பூசி போடப்படும்.

இவ்வாறு நட்டா பேசினார்.

SCROLL FOR NEXT