ஆம் ஆத்மியுடன் கூட்டணியில் இருந்த பஞ்சாப் ஏக்தா கட்சியைக் காங்கிரஸுடன் இணைத்த சுக்பால் சிங் கைரா, அரவிந்த் கேஜ்ரிவாலுடன் இணைந்தது தவறு என்று தெரிவித்தார்.
பஞ்சாப் மாநிலம், போலாத் தொகுதி எம்எல்ஏவும், பஞ்சாப் ஏக்தா கட்சியை நடத்தி வருபவருமான சுக்பால் சிங் கைரா, மௌர் தொகுதி எம்எல்ஏ ஜக்தேவ் சிங் கமலு, பதாவூர் தொகுதி எம்எல்ஏ பிர்மல் சிங் கல்சா ஆகியோர் இன்று டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்து, முறைப்படி காங்கிரஸில் இணைந்தனர்.
அப்போது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பஞ்சாப் மாநில விவகாரங்களுக்கான பொதுச் செயலாளர் ஹரிஷ் ராவத் மற்றும் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ஆகியோர் உடனிருந்தனர்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சுக்பால் சிங் கைரா, ''ஆம் ஆத்மி கட்சி 'ஒன் மேன் ஷோ'வாகச் செயல்படுகிறது. கட்சியில் கேஜ்ரிவாலைத் தாண்டி எதுவுமே இல்லை. காங்கிரஸில் இருந்து விலகி கேஜ்ரிவாலுடன் 2015-ல் ஆம் ஆத்மியில் இணைந்தது என்னுடைய தவறு.
ஆம் ஆத்மி கட்சியில் ஜனநாயகமே இல்லை. உட்கட்சி ஜனநாயகமோ, பேச்சுவார்த்தையோ இருப்பதற்கான அமைப்பும் கட்சியில் இல்லை. ஆம் ஆத்மி சார்பில் பஞ்சாப் மாநிலத்தின் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது ஜனநாயகமே இல்லாமல் நீக்கப்பட்டேன். கேஜ்ரிவால் தன்னுடைய லட்சியங்களை மட்டுமே அடையும் பழக்கம் கொண்டவராக உள்ளார்.
ஆம் ஆத்மிக்குப் பொருளாதார ரீதியாக ஆதரவு அளிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள், தங்களுடைய உதவியை நிறுத்திக்கொள்ள வேண்டும்'' என்று கைரா தெரிவித்தார்.