இந்தியா

பாக். அத்துமீறலை எளிதாக முறியடிக்க முடியும்: ஜேட்லி

செய்திப்பிரிவு

எல்லையில் பாகிஸ்தான் அத்து மீறல்களை எதிர்கொள்ளும் வல்லமை நமது படைகளுக்கு உள்ளது என்று பாதுகாப்பு அமைச் சர் அருண் ஜேட்லி கூறினார்.

2 நாள் பயணமாக ஜம்மு காஷ்மீர் வந்துள்ள அருண் ஜேட்லி நகரில் சனிக்கிழமை நிருபர்களிடம் கூறுகையில், “பாதுகாப்பு தொடர்பான விஷயங்களை தொடர்புடையை அதிகாரி களுடனும், மாநில அரசுடனும் ஆலோசிக்க உள்ளேன்” என்றார்.

எல்லையில் சண்டை நிறுத்த உடன்பாட்டை மீறி பாகிஸ்தான் நடத்திவரும் தாக்குதல்கள் பற்றி நிருபர்கள் கேட்டபோது, “இவற்றுக்கு தகுந்த பதிலடி கொடுக்கும் வல்லமை நமது படைகளுக்கு உள்ளது” என்றார்.

பாதுகாப்பு அமைச்சராக பதவியேற்ற பின் முதல்முறையாக ஜேட்லி காஷ்மீர் வந்துள்ளார். அவருடன் ராணுவ தலைமை தளபதி விக்ரம் சிங் உடனிருந்தார். ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லாவை ஜேட்லி பின்னர் சந்தித்தார். பாதுகாப்பு நிலவரம் குறித்து அவருடன் விவாதித்தார்.

ஜேட்லியின் காஷ்மீர் பயணத்துக்கு முன்னதாக, பூஞ்ச் மாவட்டத்தில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் படைகள் வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தின. இதற்கு இந்தியத் தரப்பில் தகுந்த பதிலடி தரப்பட்டது.

“பாதுகாப்பு அமைச்சரின் காஷ்மீர் பயணத்துக்கு முன், போர் நிறுத்த உடன்பாட்டை பாகிஸ்தான் மீறியிருப்பது தற்செயலாக நடந்ததா?” என ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கேள்வி எழுப்பினார்.

கட்டுப்பாடு எல்லைக் கோடு பகுதியில் கடந்த ஏப்ரல் இறுதி முதல் மே 15 வரை, போர் நிறுத்த உடன்பாட்டை மீறி பாகிஸ்தான் 19 முறை தாக்குதல் நடத்தியுள்ளது.

SCROLL FOR NEXT