கரோனா இரண்டாவது அலையில் 730 மருத்துவர்கள் பலியாகியிருப்பதாக இந்திய மருத்துவக் கழகம் (ஐஎம்ஏ) தெரிவித்துள்ளது. அதிலும் பிஹார் மாநிலத்திலேயே அதிகளாவிலான மருத்துவர்கள் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா 2வது அலை இந்தியாவை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. எனினும் அன்றாட பாதிப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து இறங்குமுகத்தில் இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 62,224ஆக குறைந்துள்ளது. இதுவரை, 26,19,72,014 பேர் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.
அன்றாட தொற்று பாதிப்போரின் சதவீதம் தொடர்ந்து 9வது நாளாக 5%க்கும் கீழ் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கரோனா இரண்டாவது அலையில் 730 மருத்துவர்கள் பலியாகியிருப்பதாக இந்திய மருத்துவக் கழகம் (ஐஎம்ஏ) தெரிவித்துள்ளது.
எந்தெந்த மாநிலங்களில் எவ்வளவு?
பிஹாரில் 115 மருத்துவர்களும், டெல்லியிலும் 109 மருத்துவர்களும், உத்தரப் பிரதேசத்தில் 79 பேரும், ஆந்திராவில் 38, தெலங்கானாவில் 37, மகாராஷ்டிராவில் 23, கர்நாடகாவில் 9 மற்றும் கேரளாவில் 24 பேரும், ஒடிசாவில் 31 என்று மொத்தம் நாடுமுழுவதும் 115 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்.
கரோன இரண்டாவது அலையின் பாதிப்பு படிப்படியாகக் குறைந்தாலும், மக்கள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளக் கூடாது என மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
தடுப்பூசியே கரோனாவுக்கு எதிரான பேராயுதம். அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியம். ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் கூட முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைபிடித்தல், கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளுதல் ஆகியவற்றை தவறாமல் பின்பற்ற வேண்டும்.