தன் குடும்பத்தினருடன் ஹரி ஓம் சுக்லா. 
இந்தியா

23 வயதில் கராத்தே சாம்பியன்; 28 வயதில் டீ விற்பனையாளர்: வறுமையில் வாடும் உ.பி. வீரர்

ஐஏஎன்எஸ்

23 வயதில் கராத்தே போட்டிகளில் 60 பதக்கங்களுக்கு மேல் வென்ற இளைஞர் ஹரி ஓம் சுக்லா, தற்போது தனது 28-வது வயதில் மதுரா மாவட்டத்தில் தேநீர் விற்றுக் கொண்டிருக்கிறார்.

ஐந்தே வருடங்களில் ஹரியின் வாழ்க்கை மோசமாக மாறிவிட்டது. சேமிப்பு குறைந்து, வேலையும் இல்லாமல், அரசாங்க உதவியும் இல்லாமல் தத்தளித்து வருகிறார். தற்போது வாழ்வாதாரத்துக்காகத் தனது தந்தையின் தேநீர் கடையில் இணைந்து தேநீர் விற்று வருகிறார்.

மதுராவைச் சேர்ந்த ஹரி தனது 13-வது வயதில் இருந்து (2006ஆம் ஆண்டு) கராத்தே பயிற்சி பெற்று வருகிறார். தாய்லாந்தில் நடந்த போட்டியில் வென்றதன் மூலம் முதன் முதலில் சர்வதேசப் பதக்கத்தை ஹரி வென்றார். 2009ஆம் ஆண்டு மும்பையில் நடந்த சர்வதேசப் போட்டி ஒன்றில் வெண்கலப் பதக்கத்தை வென்றார். மீண்டும் 2013ஆம் ஆண்டு தாய்லாந்தில் நடந்த சர்வதேசப் போட்டியில் தங்கம், வெள்ளிப் பதக்கங்களை வென்றார்.

பின் 2015ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த சர்வதேசப் போட்டியில் தங்கப் பதக்கமும், அதே போட்டியில் இன்னொரு பிரிவில் வெள்ளிப் பதக்கமும் வென்றார்.

"எல்லாம் கனவு போல இருக்கிறது. நான் ஒரு தனியார் கல்வி நிலையத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். அதில் வந்த சம்பளம் என் கராத்தே ஆர்வத்துக்கு உதவியது. ஆனால், அவர்கள் சம்பளத்தை நிறுத்தினார்கள். அதனால் பள்ளிக் குழந்தைகளுக்கு கராத்தே பயிற்சி தர ஆரம்பித்தேன். ஆனால், அதுவும் ஊரடங்கில் நின்றுவிட்டது. இப்போது தேநீர் விற்பதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை.

எனக்கு இரண்டு வயதில் ஒரு மகன் இருக்கிறான். குடும்பச் செலவுகள் உள்ளன. இந்தச் சூழல் மாறும் வரை என்னால் எப்படி வீட்டில் உட்கார்ந்து கொண்டிருக்க முடியும்? இன்று எனது பட்டப்படிப்பு சான்றிதழின் நகலைப் பெறுவதற்குக் கூட என்னிடம் பணம் இல்லை" என்கிறார் ஹரி ஓம் சுக்லா.

மதுரா எம்.பி. ஹேமமாலினி, மாநிலத்தின் மின்சாரத்துறை அமைச்சர் ஸ்ரீகாந்த் சர்மாவைச் சந்தித்து ஹரி உதவி கோரியிருந்தாலும் இதுவரை எந்த உதவியும் கிடைக்கவில்லை.

விளையாட்டு வீரர்களுக்கு அரசு ஆதரவு வேண்டும் என்கிறார் ஹரியின் பயிற்சியாளர் அமித் குப்தா. ''ஏதாவது ஒரு பள்ளியில் ஹரிக்கு வேலை கொடுத்தால் அவர் தனது கராத்தே தாகத்தையும் தீர்த்துக் கொள்வார். தடகள வீரர்களுக்குப் பயிற்சியும் தருவார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கராத்தே பிரிவு உள்ளது. ஆனால், அமைப்புக்குள் இருக்கும் அரசியலால் இந்தியாவிலிருந்து எந்த விளையாட்டு வீரரும் இந்தப் பிரிவில் பங்கேற்கவில்லை. இந்த அரசியலால் இந்தியாவில் அழியும் நிலையில் கராத்தே விளையாட்டு இருக்கிறது'' என்கிறார் அமித்.

SCROLL FOR NEXT