இந்தியா

கரோனா காலத்தில் யோகாவை நோக்கி திரும்பும் மக்கள்: ஹர்ஷ் வர்தன் பெருமிதம்

செய்திப்பிரிவு

கரோனா பெருந்தொற்று காலத்தில் யோகாவை நோக்கி நிறைய பேர் திரும்பியுள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

2021 ஜூன் 21 அன்று கொண்டாடப்படவிருக்கும் ஏழாவது சர்வதேச யோக தினத்தை முன்னிட்டு இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் மற்றும் இந்திய கலாச்சார உறவுகள் குழுவுடன் இணைந்து மோக்‌ஷயதான் யோக்சன்ஸ்தானால் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் சர்வதேச யோகா மாநாடு 2021-ன் தொடக்க நிகழ்வில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் ஹர்ஷ் வர்தன் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர் கூறியதாவது:

மனிதகுலத்தின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு குறித்து உலகம் பேசும்போதெல்லாம், நமது பண்டைய ஞானமான யோகா குறித்து தவறாமல் குறிப்பிடப்படுகிறது.

உலகம் முழுவதும் அதிகளவில் யோக பயிற்சிகள் செய்யப்படுவது அவற்றின் பிரபலத்தை காட்டுகிறது. மேற்கத்திய நாடுகளிலும் தினசரி வாழ்வின் ஒரு அங்கமாக யோகா அனுசரிக்கப்படுகிறது. உடல் மற்றும் மன ஆரோக்கியம் மீது அழுத்தம் உண்டாகியுள்ள இந்த பெருந்தொற்று காலத்திலும் கூட, யோகாவை நோக்கி நிறைய பேர் திரும்பியுள்ளனர்.

இந்த வருட யோக தினத்தின் மைய கருத்தின் (‘யோகாவோடு இருங்கள், வீட்டில் இருங்கள்’) முக்கியத்துவம் குறித்து பேசிய அவர் தற்போதைய உளகளாவிய சுகாதார அவசரகாலத்தின் காரணமாக, சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நடத்தப்படுகிற நிகழ்ச்சிகளை நடத்த முடியவில்லை. சாத்தியமான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் உறுதி செய்வதே கோவிட்-19-ன் காலகட்டத்திற்கான செய்தியாக உள்ளது.

மக்களின் ஒட்டுமொத்த சுகாதாரம் மற்றும் நல்வாழ்விற்கு யோகா அளிக்கும் சிறப்பான பலன்களை மனதில் கொண்டு, அனைத்து மக்களுக்கும் யோகாவை கொண்டு செல்வது அரசின் நோக்கமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT