இந்தியா

கோவிட் தடுப்பூசி திட்டம்; சில உண்மைகள்: மத்திய அரசு விளக்கம்

செய்திப்பிரிவு

கோவிட் தடுப்பூசித் திட்டம் பற்றிய பல்வேறு கருத்துகள் நிலவி வரும் நிலையில் இதுபற்றி மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

தடுப்பூசி சேவைகளைப் பெற ஆன்லைன் மூலம் முன்பதிவு கட்டாயமில்லை.
18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட யாரும், அருகில் உள்ள தடுப்பூசி மையத்துக்கு நேரடியாகச் செல்லலாம். தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் அங்கே பதிவு செய்து தடுப்பூசி போடுகின்றனர். இது நேரடியாக செல்லும் முறை (வாக்-இன்ஸ்) என அழைக்கப்படுகிறது.

பொது சேவை மையம் மூலம் பதிவு செய்வதும், கோ-வின் இணையதளத்தில் பதிவு செய்யும் முறைகளில் ஒன்று. ஊரகப் பகுதியில் உள்ள சுகாதாரப் பணியாளர்கள் அல்லது ஆஷா பணியாளர்கள் ஆகியோரும், பயனாளிகளை தடுப்பூசி மையங்களிலேயே பதிவு செய்து, நேரடியாக தடுப்பூசி போட்டுக்கொள்ள உதவுகின்றனர். 1075 உதவி எண் மூலமாக பதிவு செய்யும் வசதியும் உள்ளது.

மேலே கூறிய அனைத்து முறைகள், மற்றும் கிராமப்புற பகுதிகளுக்கான சிறப்பு ஏற்பாடுகள் அனைத்தும் செயல்பாட்டில் உள்ளன. இதன் மூலம் கிராமங்களில் அனைவரும் சமமாக தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியும்.

கடந்த 13ம் தேதி வரை 28.36 கோடி பேர் கோ-வின் இணையளத்தில் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 16.45 கோடி பேர் (58 சதவீதம்) ஊசி போடும் மையத்துக்கு நேரடியாக சென்று பதிவு செய்தவர்கள். ஜூன் 13ம் தேதி வரை கோ-வின் இணையளத்தில் 24.84 கோடி தடுப்பூசி டோஸ்கள் பதிவாகின. இவற்றின் 19.84 கோடி டோஸ்கள் (சுமார் 80 சதவீதம்) நேரடியாக வந்தவர்களுக்கு போடப்பட்டுள்ளன.

கடந்த மே 1ம் தேதி முதல், ஜூன் 12ம் தேதி வரை , மொத்தம் உள்ள 1,03,585 கொவிட் தடுப்பூசி மையங்களில் 26,114 தடுப்பூசி மையங்கள் துணை சுகாதார மையங்களிலும், 26,287 தடுப்பூசி மையங்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், 9,441 தடுப்பூசி மையங்கள் சமுதாய சுகாதார மையங்களிலும் தடுப்பூசி சேவைகளை வழங்கின. இவை மொத்தம் உள்ள மையங்களில் 59.7 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து சுகாதார மையங்களிலும், மக்கள் நேரடியாக சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியும்.

மொத்தம் உள்ள 69,995 தடுப்பூசி மையங்களில், இதுவரை 49,883 மையங்கள் ஊரகம் அல்லது நகர்ப்புறம் என கோ-வின் இணையதளத்தில் மாநிலங்கள் வகைப்படுத்தியுள்ளன. இவற்றில் 71 சதவீதம் ஊரகப் பகுதிகளில் உள்ளன.

கோ-வின் இணையள தகவல்படி கடந்த 3ம் தேதிவரை, பழங்குடியினப் பகுதிகளில் போடப்பட்ட கோவிட் தடுப்பூசிகளின் விவரம்:

1. பழங்குடியின மாவட்டங்களில் 10 லட்சம் பேரில் தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை, தேசிய சராசரியைவிட அதிகம் உள்ளது.

2. 176 பழங்குடியின மாவட்டங்களில், 128 மாவட்டங்களில் தடுப்பூசி பணிகள் அகில இந்திய அளவை விட சிறப்பாக உள்ளன.

3. பழங்குடியின மாவட்டங்களில் தேசிய சராசரி அளவை விட அதிகமாக தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகின்றன.

4. பழங்குடியின மாவட்டங்களில் தடுப்பூசி போடப்பட்டவர்களில் பாலின விகிதமும் சிறப்பாக உள்ளது.

இவ்வாறு தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT