உலக ரத்தக் கொடையாளர் தினத்தையொட்டி ரிஷிகேஷில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் உத்தராகண்ட் முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான திரிவேந்திர சிங் ராவத் கலந்துகொண்டு பேசியதாவது:
நமது நாட்டிலுள்ள முஸ்லிம்கள், கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதை தவிர்க்கின்றனர். தடுப்பூசி தொடர்பாக அவர்களுக்கு தயக்கம், அச்சம், தவறான எண்ணங்கள் உள்ளன. இந்த எண்ணத்தை சமூக அமைப்புகளும், ஊடகங்களும் போக்க வேண்டும். கரோனா தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். கரோனா தடுப்பூசியால் எந்தவிதப் பிரச்சினையும் இல்லை என்பதை அவர்களுக்கு புரியவைக்க வேண்டும். தயக்கத்தைப் போக்க வேண்டிய கடமை நமது சமூகத்துக்கு உள்ளது.
நீங்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என்றால், கரோனா பரவலைத் தடுக்க முடியாது. ஒருவருக்கு வரும் நோய் மற்றவர்களுக்கு எளிதில் பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.