இந்தியா

இளம் குற்றவாளி விடுதலைக்கு எதிராக டெல்லி மகளிர் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

பிடிஐ

டெல்லி மாணவி பலாத்கார வழக்கில் தண்டனை முடிந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுதலை ஆக உள்ள இளம் குற்றவாளியை விடுவிக்கக் கூடாது எனக் கோரி உச்ச நீதிமன்றத்தை அனுகியுள்ளார் டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மலிவால்.

அவரது அவசர மனு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த மனுவை சிறப்பு மனுவாக ஏற்ற உச்ச நீதிமன்ற விடுமுறை கால அமர்வு இதற்கான உத்தரவை அதிகாலை 2 மணியளவில் பிறப்பித்தது. நீதிபதிகள் ஏ.கே.கோயல், யு.யு.லலித் இந்த அமர்வில் இடம்பெற்றிருந்தனர்.

இது குறித்து டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி தனது ட்விட்டர் பக்கத்தில், "எனது மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. நாளை மூன்றாவது வழக்காக எனது மனு விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கு நிலுவையில் இருப்பதால் அதுவரை நிர்பயா வழக்கின் இளம் குற்றவாளி விடுவிக்கப்படக் கூடாது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

உச்ச நீதிமன்றம் நாளை மனுவை விசாரிக்க இருப்பதால் டெல்லி போலீஸார் இளம் குற்றவாளியை இன்று விடுவிக்க மாட்டார்கள் என டெல்லி மகளிர் ஆணையம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், இளம் குற்றவாளியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவரை வடக்கு டெல்லியில் உள்ள சீர்திருத்தப் பள்ளியிலிருந்து அப்புறப்படுத்தி ரகசிய இடத்தில் என்.ஜி.ஓ. மேற்பார்வையில் டெல்லி போலீஸார் பாதுகாத்துவைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

SCROLL FOR NEXT