இந்தியா

மாநிலங்களுக்கு கூடுதலாக 1,06,300 அம்ஃபோடெரிசின்-பி மருந்து ஒதுக்கீடு

செய்திப்பிரிவு

மாநிலங்களுக்குக் கூடுதலாக 1,06,300 அம்ஃபோடெரிசின்-பி குப்பிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்தாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்தோருக்கு கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை, மஞ்சள் பூஞ்சை போன்ற நோய் தொற்று ஏற்படுவது கண்டறியப்பட்டது. இதில் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது.

நாட்டில் இதுவரை கருப்பு பூஞ்சைக்கு 31 ஆயிரத்து 216 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,109 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கருப்பு பூஞ்சை நோய்க்கு, ‘அம்போடெரிசின்-பி’ மருந்து வழங்கப்படுகிறது. இந்த மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் இதனை மத்திய அரசே தற்போது மாநிலங்களுக்கு விநியோகித்து வருகிறது.

மாநிலங்களுக்குக் கூடுதலாக 1,06,300 அம்ஃபோடெரிசின்-பி குப்பிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் சதானந்த கவுடா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

அம்ஃபோடெரிசின்-பி மருந்தின் இருப்பை உறுதி செய்வதற்காக கூடுதலாக 1,06,300 குப்பிகள் அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், மத்திய நிறுவனங்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய நிறுவனங்களுக்கு மொத்தம் 53,000 வழக்கமான அம்ஃபோடெரிசின்-பி குப்பிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சீரான விநியோகம் மற்றும் நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிப்பதை உறுதி செய்வதற்காக வழக்கமான அம்ஃபோடெரிசின்-பி மருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT