இந்தியா

கரோனா தொற்றால் உயிரிழந்த பிபிஎல் அட்டைதாரர் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிவாரண நிதி: கர்நாடக முதல்வர் எடியூரப்பா அறிவிப்பு

இரா.வினோத்

கர்நாடக முதல்வர் எடியூரப்பா பெங்களூருவில் நேற்றுகூறியதாவது:

கரோனா வைரஸ் தொற்றின்காரணமாக ஏழை எளிய மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். குடும்பத்துக்காக வேலைக்கு சென்று சம்பாதித்த தாய், தந்தை, சகோதரர் உள்ளிட்ட முக்கிய உறுப்பினர்கள் இறந்ததால் அந்த குடும்பம் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இவர்களின் நிலைமையை கருத்தில் கொண்டு கர்நாடக அரசு 3-வது நிவாரண திட்டத்தை உருவாக்கியுள்ளது.

அதன்படி பிபிஎல் (வறுமை கோட்டுக்கு கீழே வாழ்வோருக்கு கர்நாடக அரசு வழங்கிய ரேஷன்அட்டை) அட்டைதாரர் குடும்பத்தில் வேலைக்கு சென்று சம்பாதித்த நபர் யாரேனும் கரோனாவுக்கு உயிரிழந்து இருந்தால் அந்த குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும்.

இந்த திட்டத்தின் மூலம் 30 ஆயிரம் குடும்பங்கள் வரைபயனடையும். நாட்டிலேயே முதல்முறையாக கர்நாடக மாநிலத்தில்தான் கரோனாவில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு நிவாரண தொகை வழங்கப்படுகிறது. இந்ததிட்டத்தினால் ஏழை எளிய குடும்பங்களின் வாழ்வாதாரம் மேம்படும்.

இவ்வாறு கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறினார்.

SCROLL FOR NEXT