*
டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பலாத்கார வழக்கில் இளம் குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு தண்டனை முடிந்ததை அடுத்து, நேற்று அவர் விடுதலை செய்யப்பட்டார். பாதுகாப்பு கருதி அவரை ஒரு தொண்டு நிறுவனத்தில் (என்ஜிஓ) ஒப்படைத்துள்ளனர்.
டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி ஓடும் பஸ்ஸில் 6 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாக தாக்கப்பட்டு வெளியே வீசப்பட்ட நிர்பயா, சிகிச்சை பலனின்றி பலியானார். இந்த வழக்கில் 6 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டார்.
மற்ற ஐவரில் ஒருவருக்கு அப்போது 17 வயதே ஆகி இருந்ததால், அவர் மீதான வழக்கு சிறார் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. விசாரணை முடிவில் அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து சிறார் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டிருந்த அந்த இளம் குற்றவாளியின் தண்டனை காலம் முடிந்ததை அடுத்து அவர் நேற்று விடுதலை செய்யப்பட்டார்.
உத்தரப் பிரதேச மாநிலம் படாவுனில் உள்ள தனது சொந்த ஊருக்கு செல்ல விருப்பமா அல்லது தொண்டு நிறுவனத்துக்கு செல்ல விருப்பமா என அந்த குற்றவாளியிடம் கடந்த 2 தினங்களுக்கு முன்பு கேட்டுள்ளனர். அப்போது பாது காப்பு கருதி தொண்டு நிறுவனத்துக்கு செல்ல விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். இதன்படி அவரை தொண்டு நிறுவனத்தில் ஒப்படைத்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
உச்ச நீதிமன்றத்தில் மனு
முன்னதாக, இளம் குற்றவாளியை விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்து, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனு நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில், டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மலிவால், இளம் குற்றவாளியின் விடுதலைக்கு தடை விதிக்கக் கோரி நேற்று முன்தினம் நள்ளிரவு உச்ச நீதிமன்றத்தில் ஒரு சிறப்பு மனுவை தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி ஏ.கே.கோயல் மற்றும் யுயு லலித் ஆகியோர் அடங்கிய விடுமுறை கால அமர்வு, அவசர வழக்காக விசாரிக்க மறுத்ததுடன் இளம் குற்றவாளியின் விடுதலைக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று நேற்று அதிகாலை 2 மணிக்கு தெரிவித்தனர். அதேநேரம் இந்த மனு திங்கள்கிழமை (இன்று) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.
பெற்றோர் கைது
இதற்கிடையே, இளம் குற்றவாளியின் விடுதலையை எதிர்த்து டெல்லி ஜந்தர் மந்தரில் நிர்பயாவின் பெற்றோரும் சமூக ஆர்வலர்களும் 2-வது நாளாக நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு போலீஸார் எதிர்ப்பு தெரிவித்ததால், அங்கிருந்து இந்தியா கேட் பகுதிக்குச் சென்றனர். இதையடுத்து, நிர்பயாவின் பெற்றோர் உள்ளிட்ட அனைவரையும் போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து நிர்பயாவின் தாய் ஆஷா தேவி கூறும்போது, “சிறார் நீதி சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு இன்னும் எத்தனை பலாத்காரம், கொலை சம்பவங்கள் நிகழ வேண்டும் என்று அரசு விரும்புகிறது? இதுதொடர்பாக பிரதமர் மோடியை சந்திக்க விரும்புகிறோம். அதற்கு அவர் 2 நிமிடம் ஒதுக்க வேண்டும்” என்றார்.